சோமாலியா சிமென்ட் ஏற்றி சென்ற சரக்கு கப்பல் கடத்தல்

மொகதாஷு:: கிழக்கு ஆப்ரிக்க நாடான சோமாலியாவின் புன்ட்லாண்டு பிராந்தியத்தில் உள்ள கராகாட் என்ற கடலோர நகரத்திற்கு அருகே செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் நாட்டின் கொடியுடன் சிமென்ட் அடங்கிய சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இக்கப்பல் கடற்கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்படும் ஆயுதமேந்திய கும்பலால் கடத்தப்பட்டுள்ளதாக சோமாலியாவின் கடல்சார் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.

இக்கப்பல் எகிப்தில் இருந்து புறப்பட்டு கென்யாவின் துறைமுக நகரமான மொம்பாசாவை நோக்கி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. கப்பலில் எத்தனை பேர் இருந்தனர் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை எனவும், ஒன்பது கடற்கொள்ளையர்கள் கப்பலில் நுழைந்து அக்கப்பலை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இது, கடந்த ஒருவாரத்திற்குள் நடந்த இரண்டாவது சம்பவமாகும். கடந்த வாரம் புன்ட்லாண்டு கடற்பகுதியில் எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement