சீனா மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் பாக்., உடன் கையெழுத்து

பீஜிங்: நம் அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் இடையிலான துாதரக உறவு ஏற்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, ஒரு வார கால பயணமாக சீனா சென்றுள்ளார். அவர் சீனாவின் ஹுனான் மற்றும் ஹைனான் மாகாணங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்தச் சூழலில், சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் செய்தியாளர்களிடம் பாகிஸ்தானை புகழ்ந்து தள்ளினார். “இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வளர்ந்து வருகிறது. பாகிஸ்தான் எல்லா காலத்திற்கும் ஏற்ற நண்பன் ” என்று அவர் கூறினார்.

பாகிஸ்தான் அதிபரின் பயணத்தின் போது இரு நாடுகளும் மூன்று முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. கராச்சியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், விவசாய தொழில்நுட்ப ஒத்துழைப்பு, தேயிலை உற்பத்தி ஆகிய துறைகளில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement