ஈரான் அமைச்சர் தொடர் பயணம்
மாஸ்கோ: மேற்காசிய போர் நிறுத்தத்துக்கான இரண்டாம் கட்ட பேச்சு குறித்த நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில், ரஷ்யா வந்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தானுக்கு தான் மேற்கொண்ட பயணம் வெற்றிகரமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தற்போதைக்கு தற்காலிக போர் நிறுத்தம் உள்ளது. இதை காலவரையின்றி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நீட்டித்துள்ளார்.
நிரந்தர போர் நிறுத்தம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க அமைதி பேச்சு, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் நடந்தது. முதல் கட்ட பேச்சு தோல்வி அடைந்தது. இரண்டாம் கட்ட பேச்சுக்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், அமெரிக்கா மற்றும் ஈரான் மாறி மாறி முரண்டு பிடிப்பதால், எப்போது நடக்கும் என்பது உறுதி செய்யப்படவில்லை.
இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்காக, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பாகிஸ்தானுக்கு சமீபத்தில் வந்தார். பாகிஸ்தான் தரப்புடன் பேசிவிட்டு அவர், ஓமன் நாட்டுக்குச் சென்றார்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு திடீரென, பாகிஸ்தானுக்கு அவர் திரும்பினார். அந்நாட்டு ராணுவ தளபதி அசிம் முனீரை சந்தித்து பேசினார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் புல்கோவோ விமான நிலையத்தில் வந்திறங்கிய அப்பாஸ் அராக்சியை, ரஷ்ய அதிகாரிகள் மற்றும் ரஷ்யாவுக்கான ஈரான் துாதர் காசிம் ஜலாலி ஆகியோர் வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து, தன் சமூக வலைதள பதிவில் வெளியிட்டுள்ள வீடியோவில் அராக்சி கூறியுள்ளதாவது:
பாகிஸ்தானில் உள்ள எங்கள் நண்பர்களுடன் ஆலோசனைகளை நடத்தினோம். அமைதி பேச்சு எந்த திசையில் மற்றும் எவ்வித நிபந்தனையின் கீழ் கொண்டு செல்ல முடியும் என்பது குறித்து விவாதித்தோம். பாகிஸ்தான் பயணம் வெற்றிகரமாகவும், மிகவும் ஆக்கப்பூர்வமானதாகவும் இருந்தது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
-
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்; தினமலர் நேரலை
-
கொடைக்கானல் ஏரி சாலையில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் சவாரி
-
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும்; ஈரானுக்கு ஐநா வேண்டுகோள்
-
காலி பாட்டில் திரும்பப்பெறுவதில் சிரமம்; 'டாஸ்மாக்' ஊழியர்கள் போராட்டம்
-
'ஜனநாயகனுக்கு' மதுரை பாப்பாபட்டி கிராம மக்கள் எதிர்ப்பு; கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்