3 நாளில் எண்ணெய் குழாய்கள் வெடிக்கும் புதிய கெடுவுடன் ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன் : இன்னும் மூன்று நாட்களுக்குள் சமாதான ஒப்பந்தத்திற்கு வராவிட்டால், ஈரானின் எண்ணெய் குழாய்கள் உள்ளிருந்தே வெடித்துச் சிதறும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விடுத்துள்ள மிரட்டல், உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

மேற்காசிய நாடான ஈரான், போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் நேரடியாக பேச முடியாது என ஏற்கனவே தெரிவித்துவிட்டது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஏற்கனவே நடந்த பேச்சிலும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர், அமெரிக்க பிரதிநிதிகளை சந்திக்க மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த டிரம்ப், இரண்டாம் கட்ட பேச்சுக்கு அதிகாரிகளை அனுப்பவில்லை.

இந்நிலையில், போரை நிறுத்தவும், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவும் ஈரான் புதிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 'பாக்ஸ் நியூஸ்' ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் டிரம்ப் கூறியுள்ளதாவது:

ஈரான் இப்போது கடுமையான பொருளாதார சிக்கலில் உள்ளது. இன்னும் மூன்றே நாட்களில் சமாதான ஒப்பந்தம் செய்வதற்கு ஈரான் வரவேண்டும்.

அவர்களிடம் எண்ணெய் சேமிக்க இடமில்லை; ஏற்றுமதி செய்ய கப்பல்களும் இல்லை. இந்தச் சூழலில், மேற்காசிய நாடுகள் மற்றும் ஈரான் இடையே அமைக்கப்பட்டுள்ள ராட்சத குழாய்களில் தேங்கிக் கிடக்கும் எண்ணெய், வெளியேற வழியில்லாமல் அழுத்தம் அதிகரித்து, இன்னும் 3 நாட்களில் இயந்திர ரீதியாகவும், புவியியல் ரீதியாகவும் உள்ளிருந்தே வெடிக்கத் தொடங்கும்.

ஒருமுறை இந்த விபத்து நடந்துவிட்டால், ஈரானால் மீண்டும் பழையபடி குழாய்களை சீரமைக்க முடியாது. அதன் உற்பத்தித் திறன் பாதியாகக் குறைந்துவிடும். ஈரான் இப்போது மிக மோசமான அழிவின் விளிம்பில் நிற்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

@block_B@ ஈரானின் '1-க்கு 4' கணக்கு! ஈரான் ராணுவம் கூறியுள்ளதாவது: அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்சி எங்களுக்கு எதிராக செயல்பட்டு, ஈரானின் ஒரு எண்ணெய் தளத்தை தாக்கினால் அதற்குப் பதிலாக, மேற்காசியவில் உள்ள நாடுகளின் நான்கு முக்கிய எண்ணெய் தளங்கள் தரைமட்டமாக்கப்படும். இதுதான் எங்கள் கணக்கு. இவ்வாறு ராணுவம் கூறியுள்ளது.block_B

Advertisement