ஏமப்பேர் நீச்சல் குளத்தில் சிறுவர்கள் உற்சாக குளியல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் உள்ள நகராட்சி நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பட்டதால், சிறுவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.

கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியில் இருந்த குளம் கடந்த 2023 ஆண்டு ரூ.1.21 கோடி மதிப்பில் சீரமைத்து, படகு சவாரியுடன் கூடிய குளமாக புனரமைக்கப்பட்டது. அதன் அருகில் பொழுதுபோக்கு பூங்கா, சிறுவர்கள் நீச்சல் குளம், நடைபாதை ஆகிய வசதிகளுடன் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

மாவட்டத்தின் தலை நகரமாக உள்ள கள்ளக்குறிச்சியில் மக்களின் பொழுது போக்கிற்காக இருப்பது ஏமப்பேர் படகு சவாரி குளம் மற்றும் அதில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா, சிறுவர்கள் நீச்சல் குளம், நடைபாதை மட்டும் தான் என்பதால் இதனை அதிகளவில் மக்கள் பயன்படுத்தினர்.

ஆனால் கோடை வெயிலின் உச்சத்தால் குளத்தின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து படகு சவாரி நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டு வந்தது. தற்போது இந்த படகு சவாரி குளம் மற்றும் நீச்சல் குளத்தில் நகராட்சி சார்பில் தண்ணீர் நிரப்பப்பட்டது. இதனால் ஏராளமான மக்கள் குடும்பத்தினருடன் படகு சவாரி செய்கின்றனர். அதேபோல் சிறுவர்கள் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்த தப்பிக்க நீச்சல் குளத்தில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.

Advertisement