காட்டுப்பன்றிகளால் வாழை மரங்கள் சேதம்

தொண்டாமுத்தூர்: வடிவேலம்பாளையத்தில், காட்டுப்பன்றிகளால், 400க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.

மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில், வடிவேலம்பாளையம், மோளப்பாளையம், முகாசிமங்களம் ஆகிய கிராமங்கள், வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமமாக உள்ளது. இப்பகுதியில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.

வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள், காட்டுப்பன்றிகள், விளைநிலங்களுக்குள் புகுந்து, வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

நேற்றுமுன்தினம் இரவு, வாழை தோட்டத்திற்குள் புகுந்த காட்டுப்பன்றிகளால், 400க்கும் வாழை மரங்கள் அடியோடு சேதமடைந்தன. விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

வடிவேலம்பாளையத்தை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘காட்டுப்பன்றிகள் உள்ளவரை, எந்த விவசாயமும் செய்ய முடியாது. வனத்துறையினர் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல வேண்டும். இரவு நேரங்களில், இப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும்’ என்றனர்.

Advertisement