மரங்கள் வளர்த்து ஊரை பசுமையாக்கிய இயற்கை ஆர்வலர்
வடமதுரை;வடமதுரை அருகே மொட்டணம்பட்டியில் ஏராளமான மரக்கன்றுகள் நட்டு வளர்த்து சுற்றுச்சூழலுக்கு உதவியுள்ளார் தையல் கடைக்காரர் பலராமன்.
வடமதுரை பகுதியில் மழைப்பொழிவு மாவட்டத்தின் மற்ற பகுதிகளை காட்டிலும் குறைவாகவே உள்ளது. ஆனால் மலைப்பகுதிகளில் பெய்யும் மழையளவை கொண்டு மாவட்ட சராசரி மழை அளவை கணக்கிடும்போது, ஒட்டு மொத்த மாவட்டமே ஓரளவு மழை பலன் பெற்றதை போன்ற தோற்றத்தை காட்டுகிறது.
தொடர்ந்து வறட்சி பாதிக்கும் பகுதியாக நீடிக்க இங்கிருந்த மரங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டதே முக்கிய காரணம். அழிக்கப்பட்ட மரங்கள் எண்ணிக்கையை மீண்டும் உருவாக்கும் நடவடிக்கையாக தற்போது அரசு சார்பில் ஆண்டுதோறும் நடவு செய்யப்பட்டாலும் முறையாக பாதுகாத்து வளர்ப்பதில் காணப்படும் அலட்சியத்தால் மரக்கன்று மரமாக மாறும் விகிதம் குறைவாக உள்ளது.
இவற்றில் மாறுபட்டதாக தனிநபர் ஆர்வத்துடன் மரம் வளர்ப்பில் ஈடுபடும் போது அப்பணி முழுமையாவதற்கு உதாரணமாக இருப்பவர் வடமதுரை மொட்டணம்பட்டி தையல் கடைக்காரர் பலராமன்.
வடமதுரை அருகே சிட்டம்பட்டியில் பல ஆண்டுகளாக கடை வைத்து நடத்தி வரும் இவர் தனது சொந்த செலவில் சிட்டம்பட்டி, மொட்டணம்பட்டி பகுதியில் இடங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்த்தார்.
இவற்றில் வேம்பு, புங்கம், கொன்னை, வாகை, செரி, அடுக்கரளி, மலைக்கொன்னை, ஆலம், அரசு என நிழல் தருபவை, 40 தென்னை, 20 புளி ஆகியன நீண்ட காலத்திற்கு கிராம பொது நிதிக்கும் பலன் தரும் மரங்கள். மரக்கன்றுகளை நட்டதுடன் கடமை முடிந்தது என கருதாமல் ஆடு, மாடுகளால் பாதிப்பு ஏற்படாத வகையில் கூண்டுகளையும் அமைத்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கடும் வறட்சியில் வேடசந்துார் தாலுகாவில் மா, கொய்யா, தென்னை என மரங்கள் ஆயிரக்கணக்கில் காய்ந்து கருகி போன நேரத்தில் விலைக்கு தண்ணீரை வாங்கி ஊற்றி மரக்கன்றுகளை காப்பாற்றினார்.
இவரது விடாமுயற்சியின் பலனாக இன்று கிராமத்தில் ஏராளமான மரங்கள் உயர வளர்ந்து பச்சை பசேல் தன்மையையும், ரோட்டோரங்களில் நிழலை, மக்கள் சுவாசிக்க உதவும் ஆக்ஸிஜனை வழங்கி வருகிறது.
பலன் தரும் மரங்கள் வளர்ப்பு - பலராமன், தையல் கடைக்காரர், மொட்டணம்பட்டி:
-நிழல் தரும் மரங்கள் மட்டுமின்றி கிராமத்திற்கு வருமானம் கிடைக்கும் வகையில் பலன் தரும் மரங்களையும் நட்டு காப்பாற்றி முழுமையாக மரமாக வளர்த்தேன். பல இடங்களில் கிராம மக்கள் அமர்வதற்காக சிமென்ட் பலகைகளால் இருக்கைகள் அமைத்தேன்.
விவசாயிகள் பாதி பணம், எனது பணம் பாதி என பங்களிப்பு செய்து ஒன்றரை கி.மீ. துாரத்திற்கு புதிதாக மண் ரோடு உருவாக்கினேன். மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் தவிர்ப்பு போன்ற விழிப்புணர்வு வாசகங்களுடன் 5 இடங்களில் தெருக்களின் பெயர் விபர பலகைகள் அமைத்துள்ளேன். குரும்பபட்டி பிரிவில் வழிகாட்டும் பலகையையும் அமைத்தேன். 2018ல் வீசிய கஜா புயலால் நான் வளர்த்த பல மரங்கள் சாய்ந்து போனதில் எனக்கு ஏற்பட்ட வேதனை இன்றளவும் மறையவில்லை. இதுதவிர மின்பாதைக்காக மரங்கள் வெட்டும் போது மிகுந்த வருத்தம் ஏற்படுகிறது.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
-
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்; தினமலர் நேரலை
-
கொடைக்கானல் ஏரி சாலையில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் சவாரி
-
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லட்டும்; ஈரானுக்கு ஐநா வேண்டுகோள்
-
காலி பாட்டில் திரும்பப்பெறுவதில் சிரமம்; 'டாஸ்மாக்' ஊழியர்கள் போராட்டம்
-
'ஜனநாயகனுக்கு' மதுரை பாப்பாபட்டி கிராம மக்கள் எதிர்ப்பு; கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்