காலி பாட்டில் திரும்பப்பெறுவதில் சிரமம்; 'டாஸ்மாக்' ஊழியர்கள் போராட்டம்

6


கோவை: 'டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் உள்ள சிரமங்களுக்கு தீர்வு காணக்கோரி, கோவை டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில், ஊழியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மதுபானம் விற்கும்போது, பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் பெற்று, ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். பாட்டிலை திரும்பக் கொடுத்தால், 10 ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு பாட்டிலுக்கும் ஸ்டிக்கர் ஒட்டுவது சிரமமாக இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர். க்யூஆர் கோடு பாட்டில் லேபிளில் அச்சடித்து கொடுக்கப்படுகிறது. தற்போது ஸ்கேன் செய்வதில் நெட்வொர்க் பிரச்னை ஏற்படுவதாக புகார் எழுந்திருக்கிறது.

இதற்கு தீர்வு காணக்கோரி, டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர், மண்டல முதுநிலை மேலாளர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்களை சந்திக்க மறுத்த அவர், 'மதுக்கடையை திறக்காமல் ஊழியர்கள் ஏன் இங்கு வந்தார்கள்; அவர்களை சஸ்பெண்ட் செய்யுங்கள்' என, அறிவுறுத்தி இருக்கிறார். இதைக்கேட்ட தொழிற்சங்கத்தினர் டென்ஷனாகி, அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தொழிற்சங்கத்தினரிடம் போலீசார் சமரசம் செய்தனர். இரு தரப்புக்கும் இடையே பேசினர். அப்போது, டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் மதுக்கடைகளில் நேரில் ஆய்வு செய்து, ஊழியர்களுக்கு என்னென்ன சிரமங்கள் ஏற்படுகின்றன என்பதை அறிந்து, நிர்வாக இயக்குனருக்கு தெரிவிக்கிறோம் என கூறினர். அதையடுத்து ஊழியர்கள் கலைந்து சென்றனர். அப்போது, கூட்டு நடவடிக்கை குழு கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:


காலி மது பாட்டில் வாங்க போதிய ஊழியர் நியமிக்கவில்லை. இட வசதி இல்லை. அதிக வியாபாரம் நடைபெறும் நேரத்தில் ஸ்கேனிங் இயந்திரம் சரியாக இயங்குவதில்லை. புதிய டிவைஸ் வழங்க வேண்டும். காலி மதுபாட்டில் பெறும் திட்டத்தை வெளிமுகமை மூலம் செயல்படுத்த வேண்டும்.


இத்திட்டம் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் ஜூன் முதல் வாரத்தில் விசாரணைக்கு வருகிறது. திடீரென புதிய மென்பொருள் உருவாக்கி, எவ்வித பயிற்சியும் இன்றி செயல்படுத்துவது சரியாக இருக்காது. டாஸ்மாக் நிர்வாகம் தன்னிச்சையாக செயல்படுவது நிர்வாகத்தை சீர்குலைக்கும். ஐகோர்ட்டில் இறுதி உத்தரவு வரும் வரை காலி பாட்டில்களை ஸ்கேனிங் செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

@block_P@

2 நாளில் தீர்வு காணாவிட்டால்...

கூட்டு நடவடிக்கை குழு கன்வீனர் ஜான் கூறுகையில், ''காலி மது பாட்டில் வாங்க கடைகளில் ஆளில்லை. அவற்றை வைக்க போதிய இட வசதியில்லை. 2 நாளில் கள ஆய்வு செய்து தீர்வு காண்பதாக பேச்சுவார்த்தையில் கூறியுள்ளனர். தீர்வு காணவில்லை என்றால், 29ல் மிகப்பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுப்போம். போராட்டம் மாநிலம் முழுவதும் விரிவடையும். கடைகளை மூடினால் ஏற்படும் வருவாய் இழப்புகளுக்கு மாவட்ட மேலாளரும், மண்டல முதுநிலை மேலாளரும் பொறுப்பு,'' என்றார்.block_P

Advertisement