'ஜனநாயகனுக்கு' மதுரை பாப்பாபட்டி கிராம மக்கள் எதிர்ப்பு; கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்

22


உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் முன்பு நடந்த உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு குறித்து த.வெ.க., தலைவர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்தில் உண்மையான காரணத்தை விட்டு பட்டியலின மக்களை பிற சமூகத்தினர் துன்புறுத்துவதாக காட்சிப்படுத்தியுள்ளதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் ஊராட்சி தலைவர் பதவிகள் பட்டியலினத்தைச் சார்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டது. இந்த கிராமங்களில் குறைவான எண்ணிக்கையில் பட்டியலின மக்கள் வசித்து வந்ததால், உள்ளாட்சி தேர்தல் நடக்கும் போது பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதும், வாபஸ் பெறுவதும், வெற்றி பெற்றபின் வாபஸ் செய்வதும் என பல ஆண்டுகளாக தொடர்ந்தது.


பின்னர் கருணாநிதி முதல்வராக இருந்த போது அரசு முயற்சி மேற்கொண்டு, கடந்த 3 முறைகளில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் ஊராட்சித்தலைவர்களாக வெற்றி பெற்று பதவியில் இருந்து வருகின்றனர். த.வெ.க., தலைவர் விஜய் சமீபத்தில் நடித்து திரைக்கு வராமலே சமூக வலைதளங்களில் வெளியான ஜனநாயகன் படத்தில் பாப்பாபட்டியை மையமாக வைத்து நடந்த தேர்தல் புறக்கணிப்பு குறித்து காட்சிப்படுத்தியுள்ளனர்.


இதில் தேர்தல் புறக்கணிப்பிற்கான உண்மையான காரணத்தை விட்டு, பட்டியலின மக்களை பிற சமூகத்தினர் துன்புறுத்துவதாக காட்சிப்படுத்தியுள்ளதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று பாப்பாபட்டியில் கறுப்பு கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாப்பாபட்டி கிராமத்தை இழிவுபடுத்தும் காட்சிகளை நீக்க வேண்டும். படத்தின் கதாநாயகனான விஜய், இயக்குநர் வினோத் மன்னிப்பு கேட்க வேண்டும், அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.



பாப்பாபட்டி ஊராட்சித்தலைவராக இருந்த முருகானந்தம் கூறியதாவது: 10 ஆண்டுகளாக பாப்பாபட்டி ஊராட்சி தலைவராக உள்ளேன். ஜனநாயகன் படத்தில் வன்முறையை துாண்டும் விதமாக, 'ஓட்டு போட்டால் கையை வெட்டுவேன், காலை வெட்டுவேன்' என்பது போன்ற காட்சிகள் உள்ளன. முன்பு தனி தொகுதியாக ஒதுக்கியபோது பட்டியலின மக்கள் சதவீதப்படி குறைவாக இருக்கிறார்கள் என்பதை முன்வைத்தே போராட்டங்கள் நடந்தன.


சில காலங்களுக்கு பின்னால் அதனை அரசியலாக மாற்றி, தவறானதாக இரண்டு மூன்று முறை தேர்தல் நடக்கவிடாமல் செய்தனர். அடுத்து நடந்த தேர்தல்களில் என் அண்ணன் பெரியகருப்பன் 5 ஆண்டுகள், அடுத்து வந்த 10 ஆண்டுகளாக நான் ஊராட்சித்தலைவராக இருந்தேன். படத்தில் வரும் காட்சிகளுக்கும் இந்த ஊர் மக்களின் பழக்கவழக்கங்களுக்கும் சம்பந்தமே இல்லை. தவறாக சித்தரித்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது என்றார்.

Advertisement