திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலை தினசரி இயக்க வேண்டும் :வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்தல்

திண்டுக்கல்:''திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரயிலை தினசரி இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என திண்டுக்கல் மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது.

திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 06030) ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.

இரவு 7:00 மணிக்கு திருநெல்வேலியில் புறப்படும் இந்த ரயில் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லுார், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, விருதுநகர், மதுரை, வழியாக திண்டுக்கல் வந்தடையும்.

பின்னர் ஒட்டன்சத்திரம், பழநி, உடுமலைப்பேட்டை வழியாக கோவை சென்று மேட்டுப்பாளையத்தை மறுநாள் காலை 7:30 மணிக்கு சென்றடைகிறது. அங்கிருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு மலை ரயிலில் செல்ல உதவிகரமாக இருக்கிறது.

பண்டிகை காலங்களில் இயக்கப்படும் இந்த ரயிலை தினசரி இயக்க வேண்டும் என தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு திண்டுக்கல் மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

சங்க நிர்வாகி கிருபாகரன் கூறியது:

திண்டுக்கல், மதுரை உள்பட தென் மாவட்ட வணிகர்கள், பொதுமக்கள் கோடை காலங்களில் சுற்றுலா செல்வது வழக்கம். இந்த சிறப்பு அதிவிரைவு ரயிலானது திண்டுக்கல் வழியாக மேட்டுப்பாளையம் செல்வதால் ஊட்டிக்கு செல்ல விரும்புவோர் இந்த ரயிலை பயன்படுத்த நினைத்திருந்தனர்.

ஆனால் இந்த ரயில் சேவையானது வாரத்திற்கு ஒருநாள் மட்டுமே உள்ளதால் கோடை காலம் மட்டும் இன்றி பிற பண்டிகை காலங்களிலும் ஏமாற்றம் அடைகின்றனர். இந்த சிறப்பு ரயிலை தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றார்.

Advertisement