சுவிஸ் விமான இன்ஜினில் தீ ஆறு பயணியர் காயம்

புதுடில்லி: டில்லியில் இருந்து ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்கு, நேற்று அதிகாலை 1:08 மணிக்கு 'சுவிஸ்' விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஏ - 330 விமானம் ஒன்று புறப்பட்டது.

நான்கு குழந்தைகள் மற்றும் 228 பயணியருடன் புறப்பட்ட அந்த விமானம் டில்லி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் புறப்பட்டபோது இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்தது.

இதனால், விமானி துரிதமாக செயல்பட்டு பயணியரை விமானத்தில் இருந்து சறுக்குபாதை மற்றும் படிக்கட்டுகள் வழியாக இறக்கிவிட்டார். எனினும் தீ விபத்தில் சிக்கி ஆறு பேர் காயமடைந்தனர்.

அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் காயமின்றி தப்பினர். தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து காயமடைந்த பயணியரை மீட்டனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

இதையடுத்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து அறிய விமான நிறுவன நிபுணர்கள் டில்லி விரைந்துள்ளனர். தொடர்ந்து பயணியரை வேறு விமானத்தில் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை சம்மந்தப்பட்ட விமான நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

Advertisement