முன்ஜாமினை மறுக்கலாம் சரணடைய உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடில்லி: 'குற்றஞ்சாட்டப்பட்டவரின் முன்ஜாமினை நிராகரிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உண்டு. ஆனால் அவரை, விசாரணை நீதிமன்றத்தில் சரணடையும்படி உத்தரவிட அதிகாரம் இல்லை' என, உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மேல்முறையீடு ஜார்க்கண்டில் நிலத் தகராறு மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர், முன்ஜாமின் கோரி அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதை நிராகரித்த உயர் நீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்து வழக்கமான ஜாமின் கோரும்படி உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதை சமீபத்தில் விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, உஜ்ஜல் புயான் அமர்வு பிறப்பித்த உத்தரவு:

குற்றஞ்சாட்டப்பட்டவரின் முன்ஜாமினை நிராகரிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உண்டு. ஆனால் அவரை, விசாரணை நீதிமன்றத்தில் சரணடையும்படி உத்தரவிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை. இது சட்டத்திற்கு புறம்பானது.

இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.

திட்டவட்டம் முந்தைய தீர்ப்பை சுட்டிக்காட்டி, குற்றஞ்சாட்டப்பட்டவரை நீதிமன்றத்தில் சரணடைய ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், அந்த நடைமுறை தவறு என்றும், முன்ஜாமின் மறுக்கப்படும் போது சரணடைய உத்தரவிடுவது முற்றிலும் அதிகார வரம்பற்ற செயல் என்றும் உச்ச நீதிமன்றம் தற்போது திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Advertisement