தெரியாத கணக்கில் இருந்து பணம் வந்தால் ஆபத்தா?

4

தனியார் வங்கியில் லாக்கர் வைத்திருந்தேன். வாடகையை 'ஆட்டோ டெபிட்' முறையில் எடுக்க அனுமதி கொடுக்கவில்லை. ஆனாலும் உரிய தேதிக்கு முன்பாகவே, அதாவது ஏப்ரல் 2ம் தேதியன்று இந்த ஆண்டுக்கான வாடகையும் ஜி.எஸ்.டி.யும் பிடித்தம் செய்யப்பட்டது. இது தவறு என்று கூறி வங்கியிடம் புகார் செய்தேன். அதன் பின் 6ம் தேதியன்று லாக்கரை காலி செய்தேன். 10 நாட்கள் போராடிய பின் 396 ரூபாய் பிடித்தம் செய்து, மீதமுள்ள வாடகை தொகையை மட்டும் திருப்பி கொடுத்தனர். பிடித்தம் செய்யப்பட்ட முழு ஜி.எஸ்.டி. தொகையையும், வாடகையையும் எப்படி திரும்ப பெறுவது?


- கே.கண்ணன், வாட்ஸாப்.

தனியாக ஆட்டோ- டெபிட் கொடுக்கவில்லை என்றாலும், லாக்கர் திறக்கும்போது ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து போட்டிருப்பீர்கள். அதில் 'வாடகை செலுத்த வேண்டிய காலம் வரும்போது, வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்கில் இருந்து வங்கி நேரடியாக பணத்தை எடுத்து கொள்ளலாம்' என்ற நிபந்தனைக்கு ஒப்புதல் அளித்திருப்பீர்கள்.

எனவே, பணம் எடுத்தது சட்ட விரோதம் அல்ல. ஆனால், 'தவணை தேதி'க்கு முன்பே பிடித்தது தான் அப்பட்டமான தவறு. ஒவ்வொரு நிதியாண்டின் துவக்கத் திலும் சிஸ்டம் வாயிலாக பணத்தைப் பிடிக்கும் நடைமுறையை வங்கிகள் வைத்துள்ளன. அதில் தான் நீங்களும் சிக்கியுள்ளீர்கள்.

நீங்கள் ஏப்ரல் 6ம் தேதி காலி செய்துள்ளீர்கள். ஏப்ரல் 1 முதல் புதிய நிதியாண்டு துவங்கிவிட்டதால், அந்த 6 நாட்களுக்கான அல்லது குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கான வாடகையை வங்கி பிடித்தம் செய்திருப்பர். இது அவர்களின் விதிகளுக்கு உட்பட்டதே.

ஆனால், முழு ஆண்டுக்கான சேவை வழங்கப்படாததால், முழு ஜி.எஸ்.டி. தொகை பிடித்தம் செய்யக்கூடாது. கிளை மேலாளரிடம் பேச வேண்டாம். அந்த வங்கியின் முதன்மை குறைதீர் அதிகாரிக்கு விரிவாக ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

அதில், 'தவணை தேதி'க்கு முன்னதாக பணத்தை பிடித்தது வங்கியின் தவறு. எனவே, நான் காலி செய்த ஏப்ரல் 6 வரையிலான வாடகையை தவிர்த்துவிட்டு, மீதமுள்ள பணத்தைத் தந்தது போல், எனக்கான முழு ஜி.எஸ்.டி. தொகையையும் ஜி.எஸ்.டி. கிரெடிட் நோட் வாயிலாக உடனடியாக என் கணக்கில் திரும்ப செலுத்த வேண்டும்' என்று எழுதுங்கள்.

ஒருவேளை 30 நாட்களுக்குள் பணம் வரவில்லை என்றால், நீங்கள் ரிசர்வ் வங்கியின் குறைதீர் ஆணைய வலைத்தளத்தில் (https://cms.rbi.org.in/) ஆன்லைனில் புகார் அளிக்கலாம்.


எனக்கு பொதுத் துறை வங்கியில் கணக்கு இருக்கிறது. ஏ.டி.எம்., வாயிலாக, இரண்டு முறை நான்கு ஆயிரம், நான்கு ஆயிரம் எடுத்தேன். ஆனால், மூன்று முறை என் கணக்கில் இருந்து பணம் கழிக்கப் பட்டுள்ளது. எப்படி பணத்தை திரும்ப பெறுவது?


- பி.சீனிவாசகம், வாட்ஸாப்.

வங்கியில் வாய்மொழியாக தெரிவிப்பதெல்லாம் வேலைக்கு ஆகாது. அங்கே கேள், இங்கே கேள் என்றெல்லாம் அலைய விடுவர். எல்லாவற்றையும் எழுதி, புகார் கடிதமாக வங்கி கிளையில் கொடுங்கள். முடிந்தால், அந்த வங்கியின் நோடல் அலுவலருக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

வாடிக்கையாளரான நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் குறைதீர் ஆணையர் தான். குறைதீர் ஆணையர் பார்வைக்கு சென்றால்தான் பிரச்னை தீரும். அதனால், பொறுமையாக உங்கள் இந்த வழிமுறையை பின்பற்றுங்கள், பணம் திரும்ப கிடைக்கும்.



ஒரு தனியார் வங்கியின் ராஜபாளையம் கிளையில் கணக்கு வைத்துள்ளேன். யாரோ ஒருவர் என் கணக்கில் ஒவ்வொரு நாளும் ரூ.1 நெட் பேங்கிங் வாயிலாக 25 மார்ச் 2026 முதல் பணம் செலுத்தி வருகிறார். யார் பணம் போடுகிறார், என்ன நோக்கம் என்பது தெரியவில்லை. என்ன செய்வது?


கே.ஜெகன்னாத ராஜா ராஜபாளையம்.

ஒரு ரூபாய் உங்கள் வங்கி கணக்கில் விழுவதை உஷாராக கவனித்திருக்கிறீர்களே, பாராட்டுக்கள். இதனை 'பென்னி டிராப்' சோதனை என்று வங்கி துறையில் சொல்வர். யாரோ மோசடிக்காரர், உங்கள் கணக்கை சோதித்துப் பார்க்கிறார் என்று அர்த்தம். இதில் மூன்று வழிமுறைகள் உள்ளன.

முதலில், உங்கள் வங்கி கணக்கு ஆக்டிவ்வாக செயல்பாட்டில் இருக்கிறதா என்று பார்க்கிறார். இரண்டு, 1 ரூபாய் போடும்போது, பணம் அனுப்பும் மோசடிக்காரருக்கு உங்களுடைய கணக்கு எண், பெயர் ஆகியவை குறுஞ்செய்தியாக போய்ச்சேரும். அது அவருக்கு தகவல்.

மூன்றாவது, உங்கள் வங்கிக் கணக்கை, ஏதோ ஒரு யு.பி.ஐ. செயலி அல்லது ஆட்டோ டெபிட் வசதியோடு இணைக்கிறார். முதலில் 1 ரூபாய் போட்டு சரி பார்க்கிறார். நாளை உங்கள் கணக்கில் இருந்து பெரிய தொகையை எடுப்பதற்கான ஆரம்பம் இது.

விரைவில் உங்களுக்கு ஓர் அழைப்பு வரும். நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் இருந்து அழைக்கிறேன் என்று சொல்லி, அதை நிரூபிக்கும் விதமாக ஒரு ரூபாய் போட்டிருக்கிறேன் பாருங்கள் என்பார். அதாவது, உங்களை நம்ப வைக்கும் முயற்சி அது.

இதன் வாயிலாக, மெல்ல மெல்ல, உங்களிடம் இருந்து ஓ.டி.பி. எண்ணை பெறக்கூடிய அளவுக்கு நெருக்கத்தை உருவாக்கி கொள்வார்.

உஷாராக ஒரு சில விஷயங்களைச் செய்யுங்கள். உங்கள் வங்கி கிளைக்கு போய் இந்த ஒரு ரூபாய் விஷயத்தை சொல்லி, புகாராக எழுதி கொடுங்கள்.

யார் அந்த பணத்தை போடுகிறார், கணக்கு ஏதேனும் யு.பி.ஐ. கணக்குடன், ஆட்டோ டெபிட்டுடன் இணைக்கப்பட்டு இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க சொல்லவும். அப்படி ஏதேனும் இருந்தால், அவற்றை நீக்க சொல்லவும்.

வங்கியில் இருந்து பேசுகிறேன் என்று யாரேனும் கூப்பிட்டால், கவனமாக கையாளவும். உங்களுக்கு வரும் ஓ.டி.பி. எண் அல்லது வேறு எந்த விவரத்தையும் பகிர வேண்டாம். ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள்.

Advertisement