போட்டி ஏல முறையில் மின்சார விலை நிர்ணயம் முடிவை திரும்ப பெற அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: ''மத்திய மின் மையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுதையும், போட்டி ஏலம் முறையில் விலை நிர்ணயித்து விற்கும் முடிவை, மத்திய மின்சார அமைச்சகம் கைவிட வேண்டும்,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மத்திய மின் உற்பத்தி மையங்களில் இருந்து, அந்தந்த மாநிலங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த நடைமுறையை நிறுத்திவிட்டு, போட்டி ஏலம் அடிப்படையில் விலை நிர்ணயித்து மின்சாரத்தை விற்க, மத்திய மின்சார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இது மாநில உரிமைகளை பறிப்பதோடு, மாநிலங்களின் மின் தேவையை சமாளிப்பதில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, இந்த முடி வை ஏற்க முடியாது.

தமிழக மின் தேவையில் 16,000 மெகாவாட் மின்சாரத்தை, மத்திய மின் உற்பத்தி மையங்களில் இருந்தும், தனியார் மின் உற்பத்தி மையங்களில் இருந்தும் தமிழக மின் வாரியம் வாங்குகிறது.

தனியார் மின் நிறுவனங்களிடம் வாங்கும் மின்சாரத்தை விட, மிகக் குறைந்த விலையில், மத்திய மின் உற்பத்தி மையங்களில் இருந்து மின்சாரம் வாங்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய உற்பத்தி மையங்களில் போட்டி ஏல முறையில் விலை நிர்ணயம் செய்தால், தமிழகம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் சூழல் உருவாகும்.

இதனால், பெரும் நஷ்டத்தில் இயங்கும் தமிழக மின் வாரியம், மேலும் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த இக்கட்டான சூழலை காரணமாக காட்டி, மின் கட்டணத்தை உயர்த்தினால், அது மக்களைத்தான் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாக்கும். சாதாரண மக்களால், அதை தாங்க முடியாது.

எனவே, மத்திய மின் உற்பத்தி மையங்கள் தங்கள் முடிவை கைவிட்டு நடைமுறையில் உள்ளது போலவே, அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement