திருவள்ளூர் கிரிக்கெட் லீக்: முகப்பேர் சி.சி., வெற்றி

சென்னை: டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், முகப்பேர் கிரிக்கெட் கிளப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டிகள், பல்வேறு மைதானங்களில் நடக்கின்றன.

அந்த வகையில், ஏப்ரல் 27 அன்று போரூர் ராமச்சந்திரா கல்லுாரியில் நடந்த இரண்டாவது டிவிஷன் தகுதி சுற்றில், முகப்பேர் சி.சி., - ஸ்ரீ ராமச்சந்திரா கல்லுாரி அணிகள் மோதின.

இதில், முதலில் பேட் செய்த ஸ்ரீ ராமச்சந்திரா கல்லுாரி அணி, 30 ஓவர்களில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எளிய இலக்கை துரத்திய முகப்பேர் சி.சி., அணி, 23.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அதே மைதானத்தில் நடந்த 'எலிமினேட்டர்' சுற்றில், யுனிவர்செல் சி.சி., அணி முதலில் விளையாடி, 30 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய அதிஸ் சி.சி., அணி 27.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

Advertisement