துாத்துக்குடி மாவட்டத்தில் த.வெ.க.,வே வெல்லும்: சொல்கிறார் காங்., மாவட்ட தலைவர்

1

சென்னை: 'துாத்துக்குடி மாவட்டத்தில், த.வெ.க., தான் வெல்லும்' என, சமூக வலைதள பக்கத்தில் காங்கிரஸ் துாத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி பதிவிட்டுள்ளது, தி.மு.க., கூட்டணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க விரும்பிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுடன் இணைந்து பிரசாரம் செய்யவில்லை. இதனால், தேர்தல் முடிந்த பின், காங்கிரஸ் நிர்வாகிகள் பலர், 'த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்திருக்கலாம். நல்ல வாய்ப்பை தவற விட்டு விட்டோம்' என்று பதி விட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் துாத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
துாத்துக்குடி மாவட்டத்தில் துாத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, திருச்செந்துார் தொகுதிகளில், 40 முதல் 45 சதவீத ஓட்டுகள் பெற்று, த.வெ.க., வெற்றி பெறும். ஒட்டுமொத்தமாக த.வெ.க., 25 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுகளைப் பெறும்.

பெரம்பூர், திருச்சி கிழக்கு இரண்டிலும் விஜய் வெல்வது உறுதி. விஜயுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்தால், அது வெற்றி கூட்டணியாக இருந்திருக்கும். நல்ல வாய்ப்பை காங்கிரஸ் தவறவிட்டு விட்டது. வரும் லோக்சபா தேர்தலில் விஜயுடன் கூட்டணி வைத்தால், தமிழகம், புதுச்சேரியில் காங்கிரசுக்கு வெற்றி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாது, 'காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு, மாற்று கட்சிக்காக வேலை செய்பவர்கள், உள்ளிருந்தே கட்சியை கறையான் போல் அரிப்பவர்கள்' என்றும் விமர்சித்துள்ளார்.

இது, தி.மு.க., கூட்ட ணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பின், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி நீடிக்காது என்பதாலேயே, காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் இப்படி பதிவிட்டு வருவதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

Advertisement