மூக்கில் ரத்தம் வழிந்து ஆண் குழந்தை இறப்பு
சென்னை: ஒன்றரை மாத ஆண் குழந்தை, மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்தது.
ஆந்திராவைச் சேர்ந்தவர் பிண்டோ, 30; தனியார் நிறுவன ஊழியர். கர்ப்பமாக இருந்த இவரது மனைவிக்கு, ஒரு மாதத்திற்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன், சென்னை, சவுகார்பேட்டை, சிவராமன் தெருவில் உள்ள தாய் வீட்டில் தங்கினார்.
நேற்று முன்தினம் மாலை 5:50 மணிக்கு, தாய்ப்பால் குடித்த குழந்தையை, தாய் துாங்க வைத்துவிட்டு, சமையல் வேலை பார்த்துள்ளார். இரண்டு மணி நேரத்துக்கு பின் வந்து பார்த்தபோது, குழந்தையின் மூக்கில் ரத்தம் வழிந்திருந்தது.
இதையடுத்து பெற்றோர், புரசைவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை துாக்கிச் சென்றனர். அங்கிருந்த டாக்டர்கள் கூறியதை அடுத்து, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு குழந்தை சேர்க்கப்பட்டது. அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.