தேசிய போட்டிக்காக பிரமாண்ட விஷ்ணு சிலை தயாரிப்பு

சென்னை, முகலிவாக்கத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசராவ், 51; வம்சாவளி மர சிற்பக் கலைஞர். தேக்கு மற்றும் 'ரோஸ்வுட்' போன்ற உயர்தர மரங்களை பயன் படுத்தி, சிற்பங்களை வடிப்பதில் புகழ் பெற்றவர்.

இவரது படைப்புகளில் இந்திய பாரம்பரியம், ஆன்மிக தத்ரூபங்கள் அதிகம் வெளிப்படும். மனித உருவங்கள், தெய்வ சிலைகள் மற்றும் இயற்கை காட்சிகளை மிக நுண்ணிய விபரங்களுடன் செதுக்குவதில் வல்லவர்.

இவரது கலைச் சேவையை பாராட்டி, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விருதுகளை வழங்கிஉள்ளன.

Tamil News

கைவினை தொழிலுக்கான உயரிய விருதுகளையும் இவர் வென்றுள்ளார்.

மரங்களையும், அதன் மருத்துவ குணங்களையும் நன்கு அறிந்து வைத்துள்ள இவர், எந்த மரத்தில் என்ன வீட்டு உபயோக பொருட்களை செய்ய வேண்டும் என்பதை விளக்குவதில் தனி சிறப்பு பெற்றவர்.

மர சிற்பக் கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கில், ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

இந்நிலையில், தேசிய அளவில் கைவினைக் கலைஞர்களுக்கான போட்டியை, மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் பங்கேற்க, 8 அடி உயரம், 4.25 அடி அகலம் கொண்ட ஒரே மரத்திலான பர்மா தேக்கில், மகா விஷ்ணு சிலையை வடித்து உள்ளார்.

பல நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட அச்சிலையில், அஷ்ட லட்சுமிகள், கருடன், ஹனுமன், துவார பாலகர்கள், குதிரையில் தேவதத்தன், திருமங்கையாழ்வார் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

கடந்த மூன்று மாத உழைப்பில், இச் சிலையை ஸ்ரீனிவாசராவ் வடித்துள்ளார்.


விரைவில், டில்லி யில் நடக்கவுள்ள போட்டியில், தமிழகம் சார்பில் இந்த சிலை இடம் பெற உள்ளது.


- -நமது நிருபர் -

Advertisement