பணத்தை கொடுத்தும் துாக்கம் போச்சே

ஓட்டுப் போட வாக்காளர்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுத்தும், த.வெ.க., பிரிக்கும் ஓட்டு யாருக்கு ஆப்பு வைக்கும் என்ற குழப்பத்தில் திராவிட கட்சி நிர்வாகிகள் துாக்கமின்றி புலம்பி வருகின்றனர்.

சட்டசபை தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த தேர்தலை விட தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகளின் கூட்டணிகள் பணத்தை தண்ணீரை போல் வாரி இறைத்தது.

ஒரு ஓட்டுக்கு இவ்வளவு பணமா என வாக்காளர்களே வாய் பிளக்கும் அளவிற்கு 1,000 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை கொடுக்கப்பட்டது. இன்னும் சில இடங்களில் முக்கிய எதிர்க்கட்சி நிர்வாகிகளை சரிகட்ட லட்சக்கணக்கில் பணம் கை மாறி உள்ளது.

இது மட்டுமின்றி புடவை எவர் சில்வர் தட்டு, காமாட்சி அம்மன் விளக்கு, பால் பாக்கெட் உள்ளிட்ட பல பரிசு பொருட்களும் தாராளமாக வழங்கப்பட்டது. குறிப்பாக ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் தரப்பில் பணம் தாராளமாக புழங்கியது.

இதில் த.வெ.க., - நா.த.க., உள்ளிட்ட சில கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே ஓட்டு போட பணம் தராமல் ஜனநாயக முறைப்படி மக்களை சந்தித்து பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பிரசாரம் முடியும் நாள் வரை 4 தொகுதிகளிலும் த.வெ.க., வேட்பாளர்களின் பிரசாரம் வெகு எளிமையாகவே இருந்தது. இந்நிலையில் தேர்தல் நாளன்று வெளியூரில் வேலை செய்யும் மற்றும் படிக்கும் இளைஞர்கள் ஓட்டு போட சொந்த ஊருக்கு குவிந்தனர். அவர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களையும் த.வெ.க.,வுக்கு ஓட்டு போட வலியுறுத்தியதாக தெரிகிறது.

இதனை சற்றும் எதிர்பாராத திராவிட கட்சி நிர்வாகிகள் கலக்கமடைந்தனர். கிராமங்களில் தொடங்கி நகரம் வரை வார்டு வாரியாக ஓட்டுக்கு பணம் கொடுத்து சரி கட்டி வைத்திருந்த நிலையில், வெளியூரில் இருந்து வந்த இளைஞர்கள் தங்களின் பெற்றோர்களை த.வெ.க.,வுக்கு ஓட்டு போட வைக்கும் பிரசாரம் பீரங்கியாக மாறியதை அறிந்து திராவிட கட்சியினர், அதிர்ச்சி அடைந்தனர். த.வெ.க., பிரிக்கும் ஓட்டுகள் என கணக்கிட்டு வைத்திருந்ததை விட அவர்களுக்கு ஆதரவு அதிகரித்ததை பார்த்து இந்த ஓட்டுகள் யாருக்கு சாதக, பாதகத்தை ஏற்படுத்தி ஆப்பு வைக்க போகிறதோ என கலக்கத்தில் உள்ளனர்.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பணத்தை வாரி இறைத்தும் தேர்தல் முடிவு வெளியாகும் வரை திராவிட கட்சி வேட்பாளரும் நிர்வாகிகளும் நிம்மதி இன்றி துாக்கத்தை தொலைத்து புலம்பி வருகின்றனர்.

Advertisement