வைரஸ் தொற்று :குட்டி யானை உயிரிழப்பு

​பாலக்காடு: பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி வனப்பகுதியில் இருந்து கடந்த, 14ம் தேதி ஓடை பகுதியில், பிரசவித்து ஒரு நாள் மட்டுமே ஆன ஆண் குட்டி யானை பாறை இடுக்குகளில் சிக்கியிருந்தது.

இதைக் கண்ட வனத்துறையினர் குட்டி யானையை மீட்டனர். குட்டியை அழைத்து செல்ல தாய் யானை வராமல் இருந்ததால், குட்டி யானையை பாதுகாப்பு கருதி, கடந்த 18ம் தேதி தோணி யானைகள் பராமரிப்பு மையத்திற்கு அழைத்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக குட்டி யானைக்குத் தீவிர வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மேலும், குட்டி யானைக்குப் பிறவியிலேயே இருதயத்தைப் பாதிக்கும் வைரஸ் தொற்று இருந்ததும் பரிசோதனையில் தெரியவந்தது.

வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்க குட்டி யானை உடனடியாக குளிரூட்டப்பட்ட அறைக்கு மாற்றப்பட்டு மருத்துவர் டேவிட் ஆபிரகாம் தலைமையில் சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும், வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்ததால் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி குட்டி யானை உயிரிழந்தது.

மருத்துவர் டேவிட் ஆபிரகாம் கூறுகையில், ''குட்டி யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பாறை இடுக்குகளில் சிக்கியதால் ஏற்பட்ட காயங்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டதோடு, இளநீர் மற்றும் பால் உணவாக வழங்கப்பட்டு வந்தது. குட்டி யானைக்கு வைரஸ் பாதிப்பு இருந்ததால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது,'' என்றார்.

Advertisement