'தாயுமானவர்' திட்ட நிதி தாமதம் கூட்டுறவு சங்கங்கள் தவிப்பு

திருப்பூர்: தமிழகம் முழுதும் ரேஷன் கடைகளில், 'தாயுமானவர்' என்ற பெயரில் திட்டம் துவங்கப்பட்டது. இதில், மாநிலம் முழுதும் உள்ள, 34 ஆயிரம் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும், 65 வயதுக்கு மேற்பட்ட கார்டுதாரர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச்சென்று, வாகனங்கள் வாயிலாக ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி துவங்கியது.

இத்திட்டத்தில், கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண் விற்பனை மையங்கள், மொத்த விற்பனை பண்டக சாலைகள் உள்ளிட்ட அமைப்புகள் இணைக்கப்பட்டு, இந்த சேவை வழங்கப்பட்டது.

மாதந்தோறும் இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு, பொருட்களை ரேஷன் கடை ஊழியர்கள் கொண்டு சென்று வழங்கினர். இத்திட்டம் செயல்படுத்தும் போது, இதில் ஈடுபடும் ஊழியர்களுக்கு கார்டு அடிப்படையில் ஊக்கத் தொகையும், வாகன வாடகையும் வழங்க வேண்டும்.

மாதந்தோறும் சராசரியாக, 3,000 ரூபாய் வரை ஒரு ரேஷன் கடைக்கு செலவாகியுள்ளது. இதில், சில சங்கங்கள், 10 கடைகள் வரை செயல்படுத்தி வருகின்றன.

அதன்படி, கடந்த 9 மாதங்களுக்கு, 3 லட்சம் ரூபாய் வரை செலவாகியுள்ளது. இதற்கான தொகையை அரசு இன்னும் கூட்டுறவு சங்கங்களுக்கு விடுவிக்காமல் உள்ளது.

கூட்டுறவு சங்க அலுவலர்கள் கூறியதாவது:

தாயுமானவர் திட்டம், முதல்வரால் துவங்கப்பட்டது. இதற்கான செலவினங்களுக்கு உரிய வகையில் எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.

கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும் மானியத்துடன் இந்த நிதியை, அதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து, அதிகாரிகள் வழங்க வேண்டும். அப்போது தான் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்த முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement