வாகன முகப்பு விளக்குகளில் கருப்புஸ்டிக்கர் இல்லாததால் விபத்து அபாயம்

கரூர் :கரூரில், வாகன முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது முறைபடுத்தப்படாததால், விபத்து அதிகரித்து வருகிறது.


போக்குவரத்து விதிகளில், அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து, கரூர் மாவட்டத்தில், வாகன ஓட்டிகளிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும், விதி மீறல்கள் குறைந்தபாடில்லை. இரு சக்கர வாகனங்களில் மூவர் பயணிப்பது, அசுர வேகத்தில் இரு சக்கர வாகனங்களை இயக்குவது, வாகனங்களை கண்காணிப்பதில் போலீசாரின் மெத்தனம் உள்ளிட்ட காரணங்களால் விபத்து அதிகரித்து வருகிறது.

இரு சக்கர வாகனங்கள் முதல், அனைத்து வாகனங்களிலும் நவீன ரக பவர்புல் எல்.இ.டி., விளக்குகளை பொருத்திக் கொள்கின்றனர். முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டாமல் வருவதால், எதிரே வரும் வாகனங்களின் டிரைவர்கள் தடுமாறுகின்றனர். பைக் மற்றும் மினி வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஆடம்பரத்திற்காக, விதிமுறைகளை மீறி அதிக வெளிச்சம் தரும் முகப்பு விளக்குகளை பயன்படுத்துகின்றனர். அதனால் கரூர் வழியாக சேலம், மதுரை, திருச்சி ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
எதிரே வாகனங்கள் வரும்போது, முகப்பு விளக்கு வெளிச்சத்தை குறைக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதை, பெரும்பாலான டிரைவர்கள் பின்பற்றுவதே இல்லை. இதனால், டூவீலர்கள் அதிகமாக விபத்துகளில் சிக்குகின்றன. இந்த தொடர் விதிமீறல்களை தடுக்க, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாகும்.


Advertisement