தாராளம் - மாவட்டத்தில் தடை செய்த புகையிலை பாக்கு விற்பனை- சிறுவர்களை கண்காணிக்க பெற்றோர்களுக்கு அறிவுரை
கூடலுார், ஏப். 29-
மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை, பாக்கு விற்பனை பல்வேறு இடங்களில் தாராளமாக நடந்து வருகிறது. தற்போது கோடை விடுமுறையால் சிறுவர்களிடையே போதைப்பழக்கம் அதிகரித்துள்ள நிலையில் கண்காணிக்க பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் புகையிலை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியிலும் போதை புகையிலை விற்பனை செய்வது குறித்த புகார்களும் தொடர்ந்து போலீசார்களுக்கு சென்ற வண்ணம் உள்ளது. போலீசார் நடத்தி வரும் சோதனையில் புகையிலை பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் தொடர்ந்துள்ளது.
சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு கடந்த முயன்ற 340 கிலோ போதை புகையிலையை கூடலுாரில் போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர். மேலும் தொடர்ந்து புகையிலை விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து போலீசார் ‘சீல்’ வைக்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தவிர13 கிலோ புகையிலை பதுக்கி வைத்திருந்த ஒருவரை கைது செய்தனர்.
மாவட்டத்தில் புகையிலை விற்பனையை தடுக்க உணவு பாதுகாப்புத் துறை, காவல் துறை இணைந்து மேற்கொண்ட சோதனைகளில் 500க்கும் மேற்பட்ட கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.1கோடிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்த போதிலும் மீண்டும் போதை புகையிலை, பாக்கு விற்பனை தாராளமாக நடந்து வருகிறது.
தற்போது கோடை விடுமுறையைக் கழிக்கும் சிறுவர்களிடையே போதைப் பாக்கு, புகையிலை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இவர்களை குறி வைத்து முக்கிய பல இடங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
தன்னார்வர்கள் கூறுகையில்,‘ விடுமுறையை காரணம் காட்டி வீட்டில் இருக்கும் ஏராளமான சிறுவர்கள் திரையரங்கம், விளையாட்டுத் திடல் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கூடுகின்றனர். இதில் பலர் போதை பாக்கு பயன்படுத்துகின்றனர். புதிதாக வரும் சிறுவர்களையும் இதற்கு அடிமையாக்கி விடுகின்றனர். அதனால் விடுமுறை முடியும் வரை தொடர்ந்து பல முக்கிய இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு போதைப் பொருட்களை பறிமுதல் செய்வதுடன் கூடுதல் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
போலீசார் எச்சரிக்கை:
விடுமுறை நாட்களில் சிறுவர்களை தங்களது கண்காணிப்பில் பெற்றோர்கள் வைத்துக் கொள்ள வேண்டும். வெளியில் சென்று திரும்பும் சிறுவர்களின் செயல்பாடுகள் குறித்தும் கவனிக்க வேண்டும். போதை புகையிலை பாக்கு விற்பனை செய்பவர்கள் குறித்த தகவல்களை போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும்.