ஓட்டு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஓட்டுகள் எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. ஓட்டுப்பதிவு முடிவுற்ற பின், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி மற்றும் திருவள்ளூர் ஆகிய சட்டசபை தொகுதிகளின் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், செவ்வாப்பேட்டை அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ளது.
ஆவடி, மதுரவாயல், திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளின் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பெருமாள்பட்டு ஸ்ரீராம் வித்யாமந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும், பூந்தமல்லி, அம்பத்துார் மற்றும் மாதவரம் தொகுதிகளில் பதிவாகிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பெருமாள்பட்டு ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லுாரியில் உள்ள 'ஸ்ட்ராங்' ரூமில்' பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த இடங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல் அடுக்கில், 40 மத்திய காவல் படையினர், இரண்டாவது அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், மூன்றாவது அடுக்கில் மூன்று உதவி ஆணையர், 9 ஆய்வாளர், 18 சார் - ஆய்வாளர், 40 ஆயுதம் ஏந்திய காவலர்களால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அறைகளில், 387 'சிசிடிவி' கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. பாதுகாப்பு அறை வைக்கப்பட்டுள்ள வளாகத்தின் மேலே, எவ்வித 'ட்ரோன்' மற்றும் பறக்கும் சாதனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரதாப் ஏப்ரல் 27 ஆம் தேதி ஆய்வு செய்தார்.