480 கிலோ செம்மரக்கட்டைகள் பாரிமுனையில் பறிமுதல்: 3 பேர் கைது
வடக்கு கடற்கரை: பாரிமுனையில் 480 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
பாரிமுனை பகுதியில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக, நேற்று முன்தினம் வடக்கு கடற்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்தவகையில், மண்ணடி, கிளைவ் பேட்டரி, 4வது கடற்கரை லேன் உள்ள ‘எஸ்.எஸ்.எப்., என்டர்பிரைசஸ்ʼ என்ற கிடங்கில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
கிடங்கிற்குள் நின்றிருந்த, ‘மஹிந்திரா பொலிரோʼ காரில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தேனாம்பேட்டையில் உள்ள வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில், உணவு டெலிவரி ஊழியரான சிவகங்கையைச் சேர்ந்த ஆனந்தன் ஆண்டனி, 29, மண்ணடி, வேலாயுதம் தெருவைச் சேர்ந்த ஜென்னிஸ் கான், 28, சைவ முத்தையா தெருவைச் சேர்ந்த முகமது அசார், 30, என்றும், மற்ற மாநிலத்தில் இருந்து செம்மரக்கட்டைகளை சென்னைக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களை வனத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 480 கிலோ செம்மரக்கட்டைகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவான கிடங்கின் உரிமையாளரான அப்துல் ரகுமானை தேடி வருகின்றனர்.