காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் அதிகார நந்தி சேவை கோலாகலம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவத்தின் ஐந்தாம் நாள் உத்சவமான ஏப்ரல் 28 ஆம் தேதி, அதிகார நந்தி சேவை கோலாகலமாக நடந்தது.

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா 15 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான உத்சவம் கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து சுந்தராம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய கச்சபேஸ்வரர் பவழக்கால் சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார்.

இதில், ஐந்தாம் நாள் உத்சவம் ஏப்ரல் 28 ஆம் தேதி காலை அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தளிய கச்சபேஸ்வரர் வீதியுலா வந்தார். இரவு திருக்கல்யாண உத்சவம் நடந்தது. ஆறாம் நாள் உத்சவமான ஏப்ரல் 29 ஆம் தேதி இரவு யானை வாகன உத்சவம் நடக்கிறது.

ஏப்ரல் 30 தேரோட்டம்

இதில், ஏழாம் நாள் உத்சவமான ஏப்ரல் 30 ஆம் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில் சுந்தராம்பிகையுடன் எழுந்தருளும் கச்சபேஸ்வரர் நான்கு ராஜ வீதிகளிலும் பவனி வருகிறார்.

இதில், 10ம் நாள் உத்சவமான வரும் 3ம் தேதி தேதி இரவு வெள்ளி தேரோட்டமும், 12ம் நாள் உத்சவமான வரும் 5ம் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் உத்வசமும் நடைபெறுகிறது. வரும் 8ம் தேதி, இரவு ஊஞ்சல் உத்சவத்துடன் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.

Advertisement