தனியார் விடுதியில் தீ விபத்து; 50 பெண்கள் உயிர் தப்பினர்

பெங்களூரு: கர்நாடகாவின் பெங்களூரில் தனியார் விடுதியில் தீப்பிடித்த போது, சுதாரித்துக் கொண்டதால், 50 பெண்கள் முதல் மாடியில் இருந்து குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பெங்களூரு நந்தினி லே - அவுட் ராஜ்குமார் நினைவிடத்தை ஒட்டி உள்ள சாலையில், பெண்களுக்கான பி.ஜி., என்ற, தனியார் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியை ஒட்டி, எல்.இ.டி., திரைகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.

நேற்று முன்தினம் இரவு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ மளமளவென வேகமாக பரவி, விடுதி கட்டடத்தின் மீதும் பரவி எரிந்தது. நான்கு மாடி கட்டடமான விடுதியில், 50க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியிருந்தனர்.

தீ விபத்து நடந்ததை உணர்ந்ததும், அவசர, அவசரமாக அறைகளில் இருந்து வெளியேறி, முதல் மாடியில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினர். பின், விடுதியின் காம்பவுண்ட் சுவர் மீது ஏறி வெளியே வந்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், அங்கு வந்து தொழிற்சாலை மற்றும் விடுதியில் எரிந்த தீயை அணைத்தனர். சுதாரித்துக் கொண்டதால், 50க்கும் மேற்பட்ட பெண்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. மின்கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அலறி அடித்து காம்பவுண்ட் சுவரில் இருந்து சாலையில் குதித்து, பெண்கள் உயிரை காப்பாற்றி கொள்வது, அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Advertisement