அமெரிக்காவில் உலகின் சிறந்த ராணுவம் இருக்கிறது; அதிபர் டிரம்ப் பெருமிதம்

வாஷிங்டன்: ''உலகின் மிகப்பெரிய ராணுவம் எங்களிடம் உள்ளது, எனது முதல் பதவிக் காலத்தில் நான் அதில் பெரும்பகுதியை உருவாக்கினேன் '' என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.


ஆர்டெமிஸ் II விண்வெளிப் பயணத்தின் நான்கு பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றுள்ள விண்வெளி வீரர்களான ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெர்மி ஹான்சன் ஆகியோரையும், அவர்களது குடும்பத்தினரையும் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு அழைத்து பேசினார்.

10 நாட்கள் விண்வெளியில் கழித்த பிறகு, இக்குழுவினர் ஏப்ரல் 11ம் தேதியன்று பூமிக்குத் திரும்பினர். இவர்களை சந்தித்த பிறகு நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: உலகம் முழுவதின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ள சில சிறப்புமிக்க மனிதர்கள் நம்மிடையே உள்ளனர். அவர்கள் மிகுந்த துணிச்சல் மிக்கவர்கள். அவர்கள் இதை எப்படிக் செய்கிறார்கள் என்பதே எனக்குப் புரியவில்லை.

எந்த ஒப்பந்தமும்...




என்னைப் பொறுத்தவரை, அத்தகைய சாகசத்தில் ஈடுபட நான் விரும்பமாட்டேன். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நான் மிகச் சரியான ஒரு தேர்வைத்தான் செய்திருக்கிறேன். இவ்வாறு டிரம்ப் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.



தொடர்ந்து நிருபர்களிடம், டிரம்ப் கூறியதாவது: ஈரானுக்கு எதிரான தற்போதைய அமெரிக்க கடற்படை முற்றுகை புத்திசாலித்தனமானது. ஈரானும், தனது அணுசக்தி லட்சியங்களை கைவிடாத வரையில் எந்தவொரு ஒப்பந்தமும் செய்ய முடியாது.


ஈரானிடம் அணு ஆயுதம் இருப்பதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அவர்களிடம் இப்போது மிகக் குறைவாகவே எஞ்சியுள்ளது. அவர்களிடம் சில ஏவுகணைகள் உள்ளன; அதுவும் மிகச் சிறிய அளவிலேயே உள்ளன. ஏவுகணைகளைத் தயாரிக்கும் வசதிகளும் மிகச் சிறிய அளவிலேயே அவர்களிடம் எஞ்சியுள்ளன.

அத்தகைய வசதிகளில் 80 சதவீதத்தை நாங்கள் அழித்துவிட்டோம். ஒருவேளை நாங்கள் அவர்களுடன் எந்த ஒப்பந்தமும் செய்துகொள்ளாவிட்டால், எஞ்சியவற்றையும் மிக விரைவாக அகற்றிவிட முடியும். அவர்களிடம் அணு ஆயுதம் இருக்கப்போவதில்லை. அந்த உண்மை அவர்களுக்கும் தெரியும்; ஏறக்குறைய மற்ற அனைவருக்கும் தெரியும்.

நேட்டோ உதவிக்கு...



எங்களுக்கு நேட்டோவின் உதவி தேவைப்படவில்லை; அவர்கள் உண்மையில் உதவிக்கு வருவார்களா என்பதைச் சோதிப்பதற்காகவே நான் அந்த அழைப்பை விடுத்தேன். அவர்கள் உதவிக்கு வரவே இல்லை. ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில், நாங்கள் பெரும்பாலும் உக்ரைன் போர் குறித்தே பேசினோம்; இருப்பினும், வளைகுடாப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் உதவத் தயாராக இருப்பதாக புடின் தெரிவித்தார்.

பெரிய ராணுவம்




அதற்கு நான், 'நீங்கள் எனக்கு உதவுவதற்கு முன்பாக, உங்கள் நாட்டில் நடக்கும் போரை நீங்கள் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்' என்று அவரிடம் கூறினேன். உலகின் மிகப்பெரிய ராணுவம் எங்களிடம் உள்ளது.

எனது முதல் பதவிக் காலத்தில் நான் அதில் பெரும்பகுதியை உருவாக்கினேன். அன்றிலிருந்து நாங்கள் அதை உருவாக்கி வருகிறோம், உலகின் மிகப்பெரியது, யாரும் நெருங்கவில்லை. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.

Advertisement