பொன்முடி மகனின் கொடைக்கானல் 'ட்ரீட்'; விழுப்புரம் தி.மு.க.,வில் திடீர் புகைச்சல்

- நமது நிருபர் -

சட்டசபை தேர்தலில் விழுப்புரம், விக்கிரவாண்டி தொகுதிகளில் 'உள்ளடி' வேலை பார்த்த தி.மு.க., நிர்வாகிகளை, முன்னாள் அமைச்சர் பொன்முடி மகனும், கட்சியின் மாவட்ட பொறுப்பாளருமான கவுதம சிகாமணி, கொடைக்கானலுக்கு இன்ப சுற்றுலா அழைத்து சென்று, 'தடபுடல்' விருந்து படைத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
தி.மு.க.,வின் விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி கட்டுப்பாட்டில் விழுப்புரம், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகள் உள்ளன.

அவர், சட்டசபை தேர்தலில் திருக்கோவிலுார் தொகுதியில் போட்டியிட்டார். கவுதம சிகாமணிக்காக அவரது தந்தை பொன்முடி, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து திருக்கோவிலுாரில் பிரசாரம் செய்தனர்.

அதே நேரம், விழுப்புரம் தி.மு.க., வேட்பாளர் லட்சுமணன் தனக்காக பிரசாரம் செய்ய வரும்படி வேண்டுகோள் விடுத்தபோது, பொன்முடி அங்கு செல்லவில்லை; நிர்வாகிகள் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.

தேர்தல் வேலைகளை 'சீரியசாக' செய்யுமாறு முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், தி.மு.க., நிர்வாகிகளை அறிவுறுத்தினார்.

ஆனால், பொன்முடி ஆதரவாளர்களான 30 பேர், விழுப்புரம், விக்கிரவாண்டி தொகுதிகளில் தேர்தல் பணிகளை செய்யாமல் 'டிமிக்கி' கொடுத்துவிட்டு, திருக்கோவிலுார் தொகுதியில் மட்டும் முழுவீச்சில் வேலை செய்தனர்.

தி.மு.க., மாவட்ட பொறுப்பாளராக கவுதம சிகாமணி பொறுப்பேற்ற பின், கட்சியில் உள்ள 15க்கும் மேற்பட்ட துணை அமைப்புகளுக்கு, தன் ஆதரவாளர்களையே நியமித்தார்.

அவர்கள் வேறு தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்கள் சார்ந்துள்ள தொகுதிகளில் தேர்தல் பணியாற்ற விடாமல், தன் தொகுதிக்கு மட்டும் தேர்தல் பணியாற்ற வைத்துள்ளார். இது குறித்து, கட்சி தலைமைக்கு புகார்கள் சென்றுள்ளன.

இந்நிலையில், தனக்காக திருக்கோவிலுார் தொகுதியில் தேர்தல் வேலை செய்த கட்சி நிர்வாகிகளை, இன்ப சுற்றுலாவாக கொடைக்கானல் அழைத்து சென்றுள்ளார்; அவர்களை கொடைக்கானல் பங்களாவில் தங்க வைத்து, 'தடபுடலாக' விருந்து கொடுத்து மகிழ்வித்துள்ளார்.

மாவட்டத்தில் திருக்கோவிலுார் தவிர்த்து மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட சொந்த கட்சி வேட்பாளர்களுக்கு தேர்தல் வேலை செய்யாமல் தடுத்த கவுதம சிகாமணியின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை செயல்பாடு, மற்ற வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு கூறினர்.

Advertisement