கால்நடை மருத்துவர்கள் களப்பணிக்கு முன் அனுமதி பெறும் உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

சென்னை: 'கால்நடை மருத்துவர்கள், அவசர பணி, கள ஆய்வு மற்றும் முகாம்களுக்கு செல்லும் போது, உயர் அதிகாரிகளிடம், முன் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்' என்ற உத்தரவுக்கு, இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த, கால்நடை மருத்துவர் ஏ.செந்தில்குமார் தாக்கல் செய்த மனு: தமிழக கால்நடைத்துறை சார்பில், கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, தக்க நேரத்தில் ஆலோசனையுடன் கூடிய சேவை வழங்க, 'கால்நடை வளம்' என்ற மொபைல் செயலி, கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வாயிலாக, கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து களப்பணியாளர்களும், முக வருகைப்பதிவேடை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டது.

கால்நடைகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க, அவசர பணியாக அல்லது அலுவல் காரணமாக வெளியே செல்ல நேரிட்டால், செயலி வாயிலாக உயர் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால், உடனே சிகிச்சை அளிக்க வேண்டிய, கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட களப்பணியாளர்கள், இந்த செயலி வழியாக, உயரதிகாரிகளிடம் முன்அனுமதி பெற்று செல்ல வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. இதுபோன்ற முக வருகைப்பதிவேடு, நிர்வாகப் பணியாளர்களுக்கு கட்டாயமாக்கப்படவில்லை என்பதும் பாரபட்சமானது.

எனவே, கால்நடைத்துறை களப்பணியாளர்களுக்கு மட்டும், 'கால்நடை வளம்' செயலி வழியாக, முக வருகைப்பதிவேடு செய்ய வேண்டும்; அவசர காலகட்டங்களிலும் முன்அனுமதி பெற்றே வெளியே செல்ல வேண்டும்' என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அவசர பணி, கள ஆய்வு மற்றும் முகாம்களுக்கு செல்லும் களப் பணியாளர்கள், முன்அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என்ற உத்தரவுக்கு மட்டும், இடைக்கால தடை விதித்து, இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 8க்கு தள்ளி வைத்தார்.

Advertisement