இந்தியாவிடம் வீழ்ந்தது சீனதைபே: தாமஸ் பாட்மின்டன் காலிறுதியில்

ஹோர்சென்ஸ்: தாமஸ் பாட்மின்டன் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது. காலிறுதியில் 3-0 என, சீனதைபே அணியை வென்றது.

டென்மார்க்கில், அணிகளுக்கு இடையிலான தாமஸ், உபர் கோப்பை பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான தாமஸ் கோப்பை காலிறுதியில் இந்தியா, சீனதைபே அணிகள் மோதின.
ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், சீனதைபேயின் டியென் சென் சோ மோதினர். இதில் லக்சயா 18-21, 22-20, 21-17 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.


இரட்டையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 23-21, 19-21, 21-12 என, சீனதைபேயின் ஹசியாங் சீ சியு, சி-லின் வாங் ஜோடியை வென்றது.

ஒற்றையர் பிரிவு 2வது போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-16, 21-17 என்ற நேர் செட் கணக்கில் சீனதைபேயின் சுன்-யி லின்னை தோற்கடித்தார். இத்தொடரில் இதுவரை பங்கேற்ற நான்கு போட்டிகளிலும் ஆயுஷ் ஷெட்டி, தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்.

முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 4 ஆண்டுகளுக்கு பின் இத்தொடரின் அரையிறுதிக்குள் நுழைந்தது. கடைசியாக 2022ல் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா, சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. தவிர இம்முறை, இந்தியாவுக்கு பதக்கம் உறுதியானது.

Advertisement