ராஜஸ்தானில் நகை வியாபாரி தற்கொலை: சென்னை மாநகர போலீசாருக்கு சிக்கல்
சென்னை: நகை திருட்டு தொடர்பாக ராஜஸ்தானில், சென்னை போலீசாரால் விசாரிக்கப்பட்ட நகைக்கடை உரிமையாளர் விஷம் குடித்து இறந்ததும், அவரது சகோதரர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதும், சென்னை போலீசாருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை யானைக்கவுனி, போலீஸ் நிலைய எல்லையில், பூக்கடை என்.எஸ்.சி., போஸ் சாலையில், நகைக் கடை ஒன்றில் கடந்த மாதம் இரண்டு கிலோ தங்கம் திருடு போனது. இது குறித்து, யானைக்கவுனி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த கடையில் வேலை பார்த்த, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சக்திசிங், 26, அவரது கூட்டாளி லட்சுமணன் சிங், 27, ஆகியோர் நகையை திருடியது தெரியவந்தது.
அவர்களை பிடிக்க, தனிப்படை போலீசார், ராஜஸ்தான் சென்றனர். அங்குள்ள, பாலி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் சிங் என்பவரை கைது செய்த போலீசார் சென்னை திரும்பினர். அவரிடம் இருந்து, 60 கிராம் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர். அவரது மொபைல் போனை ஆய்வு செய்த போது, அவர் பல முறை, ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டம், கர்மாவாஸ் பட்டா என்ற கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் என்ற வர்தாராம் குர்ஜர் என்பவருக்கு 'ஆன்லைன்' வாயிலாக பணப் பரிமாற்றம் செய்தது தெரிய வந்தது. வர்தாராம், தன் சகோதரர் புத்தாராம் உடன் சேர்ந்து, கே.கே.ஜுவல்லர்ஸ் என்ற நகைக் கடை நடத்தி வருவதும் தெரிய வந்தது.
தொடர் விசாரணையில், வர்தாராம், கடந்த ஆண்டு நவம்பரில் சென்னை யானைக்கவுனி, வெங்கட்ராயன் தெருவில் உள்ள நகை பட்டறையில், 750 கிராம் தங்கக் காசுகள் திருடிய வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளியே வந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, சென்னை மாநகர காவல் துறையின் தனிப்படை காவலர்கள் சிவா, கோபி உள்ளிட்ட மூன்று பேர், ராஜஸ்தான் சென்றனர். அங்கு, பாக்ரி போலீஸ் நிலையத்திற்கு வர்தாராமை வரவழைத்து, விசாரித்து அனுப்பி உள்ளனர். அவர், தன்னிடம் போலீசார் விசாரித்தது குறித்து, தன் சகோதரர் புத்தாராமுக்கு 'வாட்ஸாப்'பில் 'ஆடியோ' பதிவு செய்து அனுப்பி உள்ளார்.
போலீசாரின் விசாரணைக்கு பின், வர்தாராம் விஷம் குடித்துள்ளார். அருகிலிருந்தோர், அவரை ஜோத்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்க, அங்கு சிகிச்சை பலனின்றி, அவர் இறந்துள்ளார். அவரது சகோதரரும் விஷம் குடித்து, கவலைக்கிடமான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார். அதைத் தொடர்ந்து, சென்னை போலீசாருக்கு எதிராக, அவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வர்தாராமின் மனைவி கிரண் தேவி, பாலி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், 'சென்னை மாநகர போலீசார், என் கணவரை சோஜாட் என்ற பகுதியில் உள்ள ஓட்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு, சென்னையை சேர்ந்த நகை கடைக்காரரும் இருந்துள்ளார். அவர்கள் என் கணவரிடம், 'ஒரு கிலோ தங்க நகையை கொடுத்துவிடு. மறுத்தால், உன் மீது பொய் வழக்குப் பதிவு செய்து கொன்று விடுவோம். இல்லையென்றால் உன் நிலத்தை பறிமுதல் செய்து விடுவோம்' என, மிரட்டி உள்ளனர். அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பாலி மாவட்ட உதவி எஸ்.பி., விபன் சர்மா தலைமையில், போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால், சென்னை போலீசாருக்கு, சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும்
-
சொல்கிறார்கள்
-
சொல்கிறார்கள்
-
தயார் அரசு மருத்துவமனைகளில் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ வார்டுகள்நோய் பாதித்தால் தனி போர்டலில் பதிவேற்ற பயிற்சி
-
கோயில் திருவிழா
-
பால் குளிரூட்டும் இயந்திரங்களைபயன்இன்றி பூட்டி வைத்துள்ள ஆவின் பால் வீணாவதாக உற்பத்தியாளர்கள் புகார்
-
மதியம் விவசாய பணிகளை தவிர்க்கதோட்டக்கலைத்துறை அறிவுறுத்தல்