பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நீர்மட்டம் திடீர் உயர்வு: உள்ளான் பறவைகள் மாயம்
சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், வழக்கத்துக்கு மாறாக நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால், உள்ளான் வகை பறவைகள் மாயமாகி விட்டது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், 204 வகை பறவைகள் வந்து செல்வது கணக்கெடுப்பு வாயிலாக ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், இப்பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில், பாதுகாக்கப்பட்ட இடமாக பராமரிக்கப்படுகிறது.
பொதுவாக அக்., மாதம் முதல் வெளிநாட்டு பறவைகள் இங்கு வரத்துவங்கும். மழைக்காலத்தில் தண்ணீர் மட்டம் உயரும்போது, அதை சார்ந்து உணவு தேடும் பல்வேறு வகை பறவைகள் இங்கு வருவது வழக்கம்.
கோடை காலம் துவங்கிய பின் ஏப்., இறுதி அல்லது மே முதல் வாரத்தில் இங்கு தண்ணீர் வற்றிவிடும். சதுப்பு நிலம் சேறும் சகதியுமாக இருக்கும்போது, அதில் கிடைக்கும் புழுக்களை உணவாக உட்கொள்ளும் உள்ளான் வகை பறவைகள், இங்கு அதிகம் வரும்.
ஆனால், இந்த ஆண்டு இங்கு கொசு உள்ளான் போன்ற பறவைகள் வரவில்லை என்ற விபரம், கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் நிறுவனர் திருநாரயணன் கூறியதாவது:
பள்ளிக்கரணையில் தண்ணீர் வற்றி சேறு காணப்படும் சமயத்தில், குறைந்தபட்சம், 1,000 முதல் பல்லாயிரக்கணக்கில் உள்ளான் வகை பறவைகள் இங்கு வரும். பொரி உள்ளான், பேதை உள்ளான், சதுப்புநில மண் கொத்தி போன்றவையும் ஆயிரக்கணக்கில் இங்கு வரும்.
தற்போது நீர்மட்டம் உயர்ந்து காணப்படுவதால், இப்பறவைகள் இங்கு இல்லை. வழக்கத்துக்கு மாறான நீர்மட்டம் உயர்வு பறவைகளின் வருகையை பாதித்துள்ளது. இதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
காரணம் என்ன? இதுகுறித்து, சூழலியல் ஆர்வலர்கள் கூறியதாவது:
பள்ளிக்கரணை சதுப்பு நில தனியாக உள்ள ஒரு நீர்நிலையாக பார்க்க முடியாது. வங்கக்கடலில் உயர் அலை ஏற்படும்போது முட்டுக்காடு முகத்துவாரம் வழியாக வரும் தண்ணீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு வரும். கடலில் உயர் அலை குறையும்போது, இங்கு உயர்ந்த தண்ணீர் மட்டம் இறங்கிவிடும்.
இந்நிலையில், முட்டுக்காடு பகுதியில் தண்ணீர் வாங்கும் பகுதியில் தெற்கு மற்றும் மேற்கில் கைவிடப்பட்ட உப்பளங்களுக்கு செல்லும் தண்ணீர் தடுக்கப்பட்டுள்ளது.
இதனால், வடக்கு நோக்கி மட்டுமே தண்ணீர் வருவதால், பள்ளிக்கரணையில் நீர்மட்டம் உயர்கிறது. இது மட்டுமின்றி ஒக்கியம் மடுவு பகுதியில் நடக்கும் பணிகள், ஆகாய தாமரை அதிகரிப்பு போன்ற காரணங்களால், சதுப்பு நிலத்தில் இருந்து உபரி நீர் வெளியேறுவது பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியாக உள்ள பெரும்பாக்கத்தில், 2.5 அடி உயரத்துக்கு தண்ணீர் நிற்கிறது. தண்ணீர் மட்டம் சரியாக பராமரிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்னையில் நீர்வளத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் இதற்கு தீர்வு ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
அமெரிக்காவில் உலகின் சிறந்த ராணுவம் இருக்கிறது; அதிபர் டிரம்ப் பெருமிதம்
-
தவெக தலைவர் விஜய் ஆலோசனை முதல் குஜராத் vs பெங்களூரு அணி மோதல் வரை; இன்று (ஏப் 30) முக்கிய நிகழ்வுகள்!
-
தபால் ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க த.வெ.க., முறையீடு
-
தெருநாய்களின் ரத்தம் ரூ.25,000க்கு விற்பனை
-
வழக்குப்பதிய ரூ.1,500 லஞ்சம்: எஸ்.எஸ்.ஐ.,க்கு '2 ஆண்டு'
-
வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டுகின்றனர்: ஆலங்குளம் பனை தொழிலாளி குமுறல்