வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டுகின்றனர்: ஆலங்குளம் பனை தொழிலாளி குமுறல்

20

- நமது நிருபர் -

'வழக்கை வாபஸ் பெறாவிட்டால், நடப்பதே வேறு' என, மர்ம நபர்கள் மிரட்டல் விடுப்பதாக, போலீஸ் எஸ்.ஐ., இசக்கிராஜாவால், துப்பாக்கியால் சுடப்பட்ட பனைத்தொழிலாளி மணிகண்டன் கூறியுள்ளார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த மருதம்புத்துாரை சேர்ந்தவர் மணிகண்டன்; பனைத்தொழிலாளி. இவர், கள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி, போலீஸ் எஸ்.ஐ., இசக்கிராஜா, துப்பாக்கியால் காலில் சுட்டதில், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் நேற்று வெளியிட்டுள்ள, 'வீடியோ'வில் கூறியிருப்பதாவது:
எனக்கு பீடி, சிகரெட், புகையிலை பொருட்கள் போடுவதோ, மது குடிக்கும் பழக்கமோ இல்லை. எப்போதும் அத்தகையை பழக்கத்திற்கு அடிமையாகவும் மாட்டேன். நான் பனைத்தொழில் செய்து வருகிறேன். பதநீர் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் என்னை, கள் இறக்குவதாக குற்றம் சாட்டி, எஸ்.ஐ., இசக்கிராஜா மற்றும் அவருடன் வந்த போலீசார், மரத்தில் ஏற வைத்தனர். அவர்களிடம் பானையை கழற்றி காண்பித்தேன்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, என் சகோதரர், அவரது மகன், மகள் மற்றும் எங்களின் தந்தை ஆகியோர் வந்துவிட்டனர். எங்கள் சகோதரர் 'வீடியோ' எடுத்ததால் மொபைல் போனை தட்டிவிட்ட இசக்கிராஜா, வெளியில் சொல்லவே முடியாத வார்த்தைகளால் திட்டினார்.

என் மகனை அடிக்க பாய்ந்தார். நான் தடுத்ததால், நானும் அவரும் கீழே விழுந்து விட்டோம். அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டு விட்டது. அந்த ஆத்திரத்தில் என் காலில் துப்பாக்கியால் சுட்டுவிட்டார். தற்போது, மர்ம நபர்கள், வழக்கை வாபஸ் பெற வேண்டும்.

சமரசமாக செல்லவில்லை என்றால் நடப்பதே வேறு என, மிரட்டல் விடுக்கின்றனர். நான் முழுமையாக குணமடையாத நிலையில், என்னை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றவும், முயற்சி செய்தும் வருகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement