சிறுமிக்கு பாலியல் தொல்லை 'ஏசி' மெக்கானிக்கிற்கு 20 ஆண்டு

செங்கல்பட்டு: சிறுமியிடம் அத்துமீறிய வாலிபருக்கு, 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம், நேற்று, தீர்ப்பளித்தது.

வண்டலுார் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் திவாகர், 26; 'ஏசி' மெக்கானிக். இவர், கடந்த 2023 ஏப்., 26ம் தேதி, அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து, வண்டலுார் மகளிர் போலீசார், திவாகரை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கின் விசாரணை, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமா பானு முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் லட்சுமி ஆஜரானார்.

வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், திவாகருக்கு, 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும், விதித்து, நீதிபதி, நேற்று தீர்ப் பளித்தார்.

மேலும், இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, இழப்பீடாக 4 லட்சம் ரூபாய் வழங்கப் பட்டது.

Advertisement