துாய்மை பணி செய்ய வந்த மஹாராஷ்டிரா எம்.பி.,: செஞ்சி கோட்டையில் அனுமதி மறுப்பு


செஞ்சி: செஞ்சி கோட்டையில் துாய்மை பணி செய்ய, 300 தன்னார்வலர்களுடன் வந்த மஹாராஷ்டிராவைச் சேர்ந்த தேசியவாத காங்., - எம்.பி.,க்கு தேர்தல் விதிமுறை காரணமாக இந்திய தொல்லியல் துறையினர் அமைதி மறுத்தனர்.


மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் நிலேஷ் தியான் தேவ் லங்கே. தேதியவாத காங்., - எம்.பி., இவர், நேற்று, 'ஆப்ளா மாவளா' முன்னெடுப்பு என்கிற அமைப்புடன் இணைந்து சத்திரபதி சிவாஜி ஆட்சி செய்த கோட்டைகளில் துாய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, இன்று காலை, 8:00 மணியளவில், நிலேஷ் தியான் தேவ் லங்கே செஞ்சி கோட்டையில் துாய்மைப் பணி செய்யவதற்காக, ஆப்ளா மாவளா முன்னெடுப்பு அமைப்பை சேர்ந்த, 300 தன்னார்வலர்களுடன் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கோட்டைக்கு வந்தார்.


'தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், துாய்மைப் பணி செய்வதற்கு அனுமதி இல்லை' என, இந்திய தொல்லியல் துறை, சென்னை அலுவலக முதுநிலை அலுவலர் ரகு மற்றும் உதவி பராமரிப்பு அலுவலர் முகமது இஸ்மாயில் ஆகியோர் தெரிவித்தனர்.


இதையடுத்து, துாய்மைப் பணி செய்யும் திட்டத்தை கை விட்ட குழுவினர், கோட்டை நுழைவாயிலில் சிறுவர், சிறுமியரின் மல்லர் கம்பம் சாதனை, பரத நாட்டிய நிகழ்ச்சி, உறுதி மொழியேற்பு ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தினர். மேலும், செஞ்சி கோட்டையில் துாய்மைப் பணி செய்வதற்கான உபகரணங்கள், குப்பை தொட்டிகள், அறிவிப்பு பலகைகளை வழங்கினர். பின் செஞ்சி கோட்டையை சுற்றி பார்த்தனர்.

Advertisement