கோவில் முன் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்
உசிலம்பட்டி: கோவில் பூசாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் ஆத்தங்கரைப்பட்டி கிராம மக்களுடன் போலீசார் மற்றும் தாசில்தார் பேச்சு நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் எழுமலை அருகே ஆத்தங்கரைப்பட்டியில் மாதாந்திர சுப்பிரமணியர் கோயில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இந்த கோயிலை பூசாரியாக உள்ளவர் தனி நபருக்கு பாத்தியப்பட்ட கோயிலாக மாற்ற முயற்சிக்கிறார். இதற்கு அறநிலையத் துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குகின்றனர் என, ஆத்தங்கரைப்பட்டி கிராம மக்கள் கோயில் முன்பாக நேற்று காலை 10.00 மணி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கோவில் பூசாரி கணேசன் தனக்கு பாதுகாப்பு இல்லை என கோயிலை பூட்டிச் சென்றார். இன்று சித்திரை திருவிழா எதிர் சேவை நிகழ்ச்சிக்காக மாதாந்திர சுப்பிரமணியர் கோயிலில் இருந்து சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் கொண்டு வர வேண்டும். சுப்பிரமணியர் கிளம்பியவுடன் எழுமலை திருவேங்கட பெருமாள் கோயிலில் இருந்து பெருமாள் புறப்பட்டு எழுமலை ராஜகணபதி கோயில் முன்பாக வருவார்.
பெருமாளும் சுப்பிரமணியரும் இரவு முழுவதும் தங்கி நாளை மாலை எதிர் சேவை நிகழ்ச்சி நடைபெறும். பூசாரி தனக்கு பாதுகாப்பு கொடுத்தால் தான் சிலை எடுக்க வரமுடியும் என்றதால், பூசாரிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து எழுமலை போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்பாக எழுமலை மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆத்தங்கரைப்பட்டி கிராம மக்கள் தற்போது உள்ள பூசாரியை தவிர்த்து வேறு யாராவது வைத்து திருவிழா நடத்த சிலைகளை எடுத்துச் செல்லவேண்டும் என காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இருதரப்பினரிடமும் பேரையூர் தாசில்தார் செல்லப்பாண்டி, டி.எஸ்.பி., ஷண்முகசுந்தரன், ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.