நடைபாதையெல்லாம் கடை போட்டாச்சு .. ரோடு மட்டுமே மிச்சம்: அலட்சிய அதிகாரிகளால் ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள் சிரமம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் பஜார் வீதி நடைபாதையெல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் போட்டதால் மக்கள் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இன்னும் தார் ரோடு மட்டுமே மிச்சம் உள்ளது என்ற நிலையால் ஆம்புலன்ஸ்கள், பஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் எளிதில் செல்ல முடியாமல் தினமும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

நகரின் எல்லை பகுதியான இந்திரா நகரில் இருந்து ஆண்டாள் தியேட்டர் வரையுள்ள தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் நடந்து செல்லும் நடை பாதைகள் அனைத்தும் முழு அளவில் ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் போடப்பட்டுள்ளது. தார் ரோட்டில் தான் டூவீலர்கள், ஆட்டோக்கள் நிறுத்தபடுகிறது.

காமராஜர் சிலையில் இருந்து சின்ன கடை பஜார் வழியாக பஸ் ஸ்டாண்ட் வரை தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் டூவீலர்கள் கூட செல்ல முடியாமல், அவசர நேரத்தில் தீயணைப்பு வாகனங்கள் கூட எளிதில் வர முடியாத நிலை உள்ளது.

பஸ் ஸ்டாண்டின் உட்புறத்திலும் சுற்றுப்புறத்திலும், பள்ளிவாசல் முதல் ஆண்டாள் கோயில் வடக்கு வாசல் வரையிலும் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் போட்டி போட்டு அதிகரித்து வருகிறது.

இதுபோல் பென்னிங்டன் காய்கறி மார்க்கெட்டின் உட்பகுதியிலும் கடைகள் போட்டி போட்டு நீட்டி வருவதால் மார்க்கெட்டிற்குள் சென்று காய்கறி வாங்குவதையே மக்கள் தவிர்க்கும் நிலை உருவாகி வருகிறது.

மணிக்கூண்டில் இருந்து சர்ச் சந்திப்பு, கைகாட்டி பஜார் வழியாக செங்குளம் விலக்கு வரையுள்ள தார் ரோட்டின் இருபுறமும் பெருகும் ஆக்கிரமிப்புகளாலும், தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களாலும் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.

அதிலும் தற்போது நான்கு வழிச்சாலை வழியாக கனரக வாகனங்கள் வருவதால் சர்ச் சந்திப்பு வரை கடும் போக்குவரத்து நெருக்கடி, விபத்து ஏற்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் அரசு மருத்துவமனைக்கு வரக்கூடிய அனைத்து பாதைகளிலும் எளிதில் ஆம்புலன்ஸ்கள் வர முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு உள்ளது.

உழவர் சந்தை வடபுறம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் ரோட்டின் கழிவு நீர் வாறுகாலை தோண்டி போட்டு பல மாதங்கள் ஆகியும், இதுவரை பாலம் கட்டாமல் இன்னும் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது.

இதேபோல் அனைத்து பஜார் வீதிகளிலும் மக்கள் நடந்து செல்லும் நடைபாதைகளில் சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டுள்ளதால் டூவீலர்கள் தார் ரோட்டில் தான் நிறுத்தப்படுகிறது.

அனைத்து தெருக்களிலும் வீடுகள் முன்பு தகர செட்டு போட்டும், சிமிண்ட் தளம் அமைத்து நீட்டித்து நடைபாதையை ஆக்கிரமிப்பதும், கார்களை நிறுத்திக் கொள்கின்றனர்.

ரத வீதிகளில் கழிவுநீர் வாறுகால்களை ஓட்டல்கள், பால்கோவா கடைகள்

போட்டி போட்டு ஆக்கிரமித்துள்ளதால் வாறுகால்கள் அடைபட்டு மழை பெய்தால் கழிவுநீர் தான் ரோட்டில் செல்கிறது.

இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டிய நகராட்சி, மாநில நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து காவல்துறை உட்பட அனைத்து துறைகளும் கண்கூடாக பார்த்தும் கண்டு கொள்ளாமல் அலட்சியப்போக்குடன் இருக்கின்றனர்.

* உயிர்காக்கும் நேரத்தில் தவிப்பு

நகரில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் இருக்கும் அனைத்து ரோடுகளிலும் ஆக்கிரமிப்பு போட்டி போட்டு அதிகரித்து வருகிறது. வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. இதனால் மாரடைப்பு, பிரசவம் போன்ற உயிர்காக்கும் சிகிச்சை பெற வேண்டிய அவசர சூழலில் ஆட்டோக்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. ஆம்புலன்ஸ்கள் எந்த ரோட்டிலும் எளிதில் செல்ல முடியாத நிலை தான் உள்ளது. இதனை அனைத்து அரசு துறை அதிகாரிகளும் சரி செய்ய வேண்டும்.

-சந்திர போஸ், ஆட்டோ டிரைவர்.

* தினமும் சிரமம்

நகரில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான வெளியூர் பக்தர்கள் வருவது அதிகரித்து வரும் நிலையில்

தெருக்கள் முதல் தேசிய நெடுஞ்சாலை வரை அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்பும், போக்குவரத்து நெருக்கடியும் பல ஆண்டுகளாக நீடிக்கிறது. இதனை அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கண்கூடாக பார்த்தும் கண்டுகொள்ளாமல் உள்ளதால் மக்கள் தினமும் சிரமத்தை சந்திக்கின்றன.

- ஈஸ்வரன், சமூக ஆர்வலர்.

தீர்வுகள்

* இந்திரா நகரில் இருந்து மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவில் வரை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை முழு அளவில் அகற்றி சென்டர் மீடியன் அமைக்க வேண்டும்.

* பஸ் ஸ்டாண்ட் முதல் டவுன் போலீஸ் ஸ்டேஷன் வரை உள்ள ஒரு வழி பாதையை இருவழிப்பாதையாக மாற்றினால் மட்டுமே எளிதில் ஆம்புலன்ஸ்கள் தீயணைப்பு வாகனங்கள் வந்து செல்லும் நிலை உருவாகும்.

* தெருக்கள், பஜார் வீதிகளில் மக்கள் நடந்து செல்லும் அனைத்து நடைபாதை ஆக்கிரமிப்புகளையும் முழு அளவில அகற்ற வேண்டும்.

* வடக்கு ரத வீதியில் பல்வேறு மருத்துவமனைகள் உள்ள நிலையில்

உயிர்காக்கும் சிகிச்சை பெறுவோர் கர்ப்பிணிகள் எளிதில் ஆட்டோ கார்களில் வந்து செல்ல வசதியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அங்கு அரசியல் கட்சிகள் கூட்டங்கள் நடத்த அனுமதிக்க கூடாது.

Advertisement