திருமண வரவேற்பில் தகராறு ஒரு தரப்பினர் சாலை மறியல் கிளயனுார் அருகே பரபரப்பு

வானுார்: கிளியனுார் அருகே வரவேற்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறை கண்டித்து ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

வானுார் அடுத்த கொந்தமூர் பகுதியைச் சேர்ந்த இளைஞரும், கீழ்சித்தாமூரைச் சேர்ந்த இளம் பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இருவருக்கும் நேற்று முன்தினம் கிளியனுார் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

அப்போது நடந்த டி.ஜே., நிகழ்ச்சியில் கொந்தமூர் மற்றும் கீழ்சித்தாமூர் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்குள் தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

தகவலறிந்த கிளியனுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, இரு தரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், நேற்று மதியம் 1:00 மணிக்கு, கீழ்சித்தாமூர் பகுதியைச் சேர்ந்தவர்கள், கொந்தமூர் பகுதியை சேர்ந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கிளியனுார் போலீசில் புகார் அளித்து விட்டு சென்றனர்.

அவர்கள் கொந்தமூர் பகுதியைக் கடந்த போது மீண்டும் இரு தரப்பினருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த கொந்தமூர் பகுதி மக்கள், திடீரென புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர்.

தகவலறிந்த கிளியனுார் போலீசார் மற்றும் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., ரூபன்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டு 1:20 மணிக்கு கலைந்து சென்றனர்.

Advertisement