போட்டி தேர்வு, கோடைகால பயிற்சி மையங்களளை தேர்ந்தெடுப்பதில் தேவை உஷார்! விடுமுறை கால வகுப்பு என்ற பெயரில் களமிறங்கும் போலி மையங்கள்
சின்னாளபட்டி:விடுமுறை கால சலுகை பயிற்சி வகுப்பு போன்ற பெயர்களில், அங்கீகாரமற்ற பல போலி நிறுவனங்கள் களமிறங்கி உள்ளன. உரிய அங்கீகாரம், கட்டமைப்புகளற்ற நிறுவனங்களால் ஏமாற்றப்படுவதை தவிர்க்க பயிற்சி நிறுவனத்தை தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மாவட்டத்தில் 10 ,பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்த கட்ட கல்வியை தொடரும் வழிகள் குறித்த திட்டமிடலில் ஈடுபட்டு வருகின்றனர். பிற வகுப்பு மாணவர்கள் கோடைகால விடுமுறையை பயனுள்ளதாக ஆக்கும் வகையில் பல்வேறு பயிற்சி வகுப்புகளில் சேரும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் கல்லுாரி மாணவர்களும் அரசு போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்த ஏதுவாக கோடைகால விடுமுறையை பயன்படுத்துகின்றனர்.
இச்சூழலில் நீட், ஜே.இ.இ., டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி., போலீஸ் பணிக்கான தேர்வு, டைப்ரைட்டிங், அடிப்படை கம்ப்யூட்டர் கல்வி, நீச்சல், யோகா, நர்சிங் முதலுதவி உள்ளிட்ட பல்வேறு பெயர்களைக் கொண்டு கிராமங்கள் தோறும் பயிற்சி மையங்கள் பல உருவாகி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பயிற்சிக்கான போதிய கட்டமைப்புகள் இல்லாத சூழலில் செயல்பட்டு வருகின்றன. உரிய பாடத்திட்டங்கள் பின்பற்றப்படுவதில்லை .தகுதியான பயிற்சியாளர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. அதற்கான கட்டட வசதிகளின்றி நெரிசலான சூழலில் பயிற்சி மையங்களை நடத்துகின்றனர்.
உரிய அரசு துறைகளில் அங்கீகாரம் பெறப்படாத சூழலில் கட்டணத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு சேர்க்கை நடத்துகின்றனர். பெரும்பாலான பயிற்சி நிறுவனங்கள் உரிய அனுமதி பெறாதவையாக உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் நுாற்றுக்கணக்கான பயிற்சி நிறுவனங்கள் சேர்க்கை நடத்துகின்றன. இதற்காக கவர்ச்சியான விளம்பர உத்திகளை கையாண்டு வருகின்றனர். போலி நிறுவனங்கள் மூலம் கடந்த காலங்களில் அதிக கட்டணம் செலவிட்ட நிலையில் பலர் ஏமாற்றப்பட்டு உள்ளனர்.இது போன்ற சூழலில் ஏமாற்றப்படுவதை தவிர்க்க போலி நிறுவனங்கள் மீதான கண்காணிப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்த வேண்டும். ஆயத்தமாகி வரும் மாணவர்கள் பயிற்சி அமைப்பை தேர்வு செய்யும் போது சம்பந்தப்பட்ட நிறுவனம் தொடர்பான முழுமையான தகவல்களை விசாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
முழுமையாக விசாரிக்கலாம்
வேலைவாய்ப்பு குறித்த இளைஞர்களின் தேடுதலை குறிவைத்து போலி நிறுவனங்களின் வசூல் வேட்டை தாராளமாக நடக்கிறது. இதுபோன்ற சூழலில் கவர்ச்சியான வாசகங்களை மட்டுமே நம்புவது ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும். உடன் படிக்கும் நண்பர் சேர்ந்ததற்காக எந்த விசாரணையுமின்றி கண்ணை மூடிக்கொண்டு அதே பயிற்சி மையத்தில் இணைவது கூடாது. சம்பந்தப்பட்ட மையங்கள் தொடர்பான தகவல்களை முழுமையாக விசாரிக்க வேண்டும். பயிற்சிக்கென உரிய அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா சம்பந்தப்பட்ட பயிற்சிக்கான பாடத்திட்ட அமைப்புகள், பிற்கால தகுதி, வேலை வாய்ப்பிற்கு உதவுமா, நிறுவனத்தின் பின்புலம், பயிற்சிக்கால அறிவுரைகளின் பயன், முன்னதாக அங்கு பயிற்சி முடித்த மாணவர்களின் ஆலோசனை போன்ற தகவல்களை சேகரிக்க வேண்டும். போதிய விழிப்புணர்வு இருந்தால் போலிகளால் பணத்தையும் நேரத்தையும் இழப்பதை தவிர்க்க முடியும்.
மனோகரன்,பா.ஜ., ஆத்தூர் வடக்கு ஒன்றிய பொது செயலாளர், பெருமாள்கோவில்பட்டி .
மேலும்
-
கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி விழா கேரள போலீஸ் கெடுபிடி; பக்தர்கள் அதிருப்தி
-
விஜய் வருகை ரத்து: வேளாங்கண்ணியில் காத்திருந்தோர் ஏமாற்றம்
-
ஈரானுக்கு இரண்டு வழி: அதிபர் டிரம்ப் நிபந்தனை
-
திவால் ஆன நிறுவனத்தின் சொத்துக்களை வாங்கும்போது கவனம் தேவை!
-
அறக்கட்டளை நிர்வாகத்திடம் சொத்து வாங்குவோர் கவனிக்க!
-
முன்னாள் ராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது