திவால் ஆன நிறுவனத்தின் சொத்துக்களை வாங்கும்போது கவனம் தேவை!

சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று நினைத்து அதற்கான பணிகளை தொடங்கும் நபர்கள் பல்வேறு விஷயங்களில் மிகவும் கவனமாக செயல்ட வேண்டும். குறிப்பாக, யாரிடம் இருந்து வீடு வாங்குகிறோம் என்பதில் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

தனி நபர்களிடம் இருந்து வீடு வாங்கும் போது உரிமையாளர் தொடர்பான உண்மை நிலவரத்தை விசாரிப்பது அவசியம். இதில் ஆவணத்தில் உள்ள அடையாள சான்றுகளை, விற்பவரின் அடையாள சான்றுகளுடன் ஒப்பிட்டு பார்த்து உறுதி செய்ய வேண்டும்.

இந்த விஷயத்தில் தனி நபர்களிடம் வீடு வாங்கும் போது கவனமாக இருக்கும் மக்கள், நிறுவனங்களிடம் இருந்து வீடு வாங்கும் போது அலட்சியமாக இருக்கின்றனர். குறிப்பாக, பிரபலமான கட்டுமான நிறுவனம் என்றால் அதன் உரிமையாளரை வீடு வாங்குவோர் நேரில் சந்திக்க முடியாது.

உரிமையாளர் சார்பில் விற்பனை பிரதிநிதிகள் தான் அனைத்து விஷயங்களையும் கவனிப்பர். இது போன்ற சமயங்களில், அந்த குடியிருப்பு திட்டம் உள்ள நிலம் யார் பெயரில் உள்ளது, அவர் தற்போது உயிருடன் இருக்கிறாரா என்று விசாரிக்க வேண்டும்.

இதற்கு அடுத்தபடியாக, பிரபலமான நிறுவனம் பெயரில் செயல்படுத்தப்பட்ட திட்டம் என்று விற்பனைக்கு வரும் வீடுகள் விஷயத்தில் வேறு சில பிரச்னைகளும் இருக்கின்றன. சில நிறுவனங்கள் நிதி நிர்வாக ரீதியாக திவால் ஆகியுள்ள சூழலில், அதில் வீடு வாங்குவோர் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

இதில், நிதி நிர்வாக ரீதியாக திவால் ஆகும் நிறுவனங்கள் அது குறித்து அரசின் சம்பந்தப்பட்ட அமைப்பிடம் தெரிவிக்க வேண்டும். அந்த அமைப்புகளிடம் வேறு நிறுவனங்கள் அணுகி, அத்திட்டத்தை கையகப்படுத்தி வீடுகளை விற்பனை செய்வது வழக்கமாக உள்ளது.

திவால் நடவடிக்கையில் சிக்கிய நிறுவனத்திடம் உள்ள வீடுகள் வேறு நிறுவனம் அல்லது வங்கியின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும். இதில், வங்கிகள் ஏலம் வாயிலாகவும், புதிய நிறுவனங்கள் வழக்கமான நடைமுறையிலும் வீடுகளை விற்பனை செய்யும்.

பெரும்பாலான இடங்களில், திவால் பிரச்னையில் சிக்கிய திட்டங்களில் வீடு வாங்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், சில சமயங்களில் இதில் திவால் ஆன நிறுவனம் தொடர் நடவடிக்கைகளை எதிர்த்து வழக்கு தொடர்வது உண்டு.

இது போன்று பழைய கட்டுமான நிறுவனம் வழக்கு தொடர்ந்தால், அங்கு புதிதாக வீடு வாங்கும் மக்களுக்கு சட்டசிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. திவால் நடவடிக்கையில் உள்ள திட்டத்தில் வீடு வாங்கும் போது, அதன் பழைய நிறுவனத்தின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பதையும் விசாரிக்க வேண்டும்.

குறிப்பாக, இது போன்ற திட்டங்களில் வீடு வாங்குவதற்கு முன் அங்குள்ள வீட்டு உரிமையாளர் சங்க நிர்வாகிகளையும் சந்தித்து கருத்துகளை பெற வேண்டும். இதனால், அங்குள்ள உண்மை நிலவரத்தை அறிய முடியும் என்கின்றனர் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள்.

Advertisement