அறுவை சிகிச்சையில் கவனக்குறைவு ரூ. 7 லட்சம் அபராதம்: நுகர்வோர் ஆணையம்

புதுச்சேரி: தவறான அறுவை சிகிச்சை மற்றும் சிகிச்சையில் அலட்சியம் காட்டிய மருத்துவமனை மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோர் இழப்பீடாக நோயாளிக்கு ரூ.7 லட்சம் வழங்க, புதுச்சேரி மாநில நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வில்லியனுாரைச் சேர்ந்த 30 வயதான நபர், கடந்த 2018, ஆகஸ்ட் 7ம் தேதி, புதுச்சேரியில் உள்ள தனியார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் பித்தப்பை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு அவருக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் தொடர்ச்சியான வாந்தி ஏற்பட்டது. சோதனையில், அறுவை சிகிச்சையின் போது கல்லீரல் குழாயில் ஏற்பட்ட காயத்தால் பித்தக் கசிவு உண்டானது கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நோயாளி, ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு சீரமைப்பு அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டார். இந்த சிகிச்சை குறைபாடு குறித்து அவர், புதுச்சேரி மாநில நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை, ஆணைய தலைவர் சுந்தரவடிவேலு மற்றும் உறுப்பினர் உமாசங்கரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

விசாரணையில் குறைபாடுகள் கண்டறியப்பட்டன. குறிப்பாக அறுவை சிகிச்சைக்கு முன் செய்ய வேண்டிய கல்லீரல் செயல்பாட்டு சோதனை மேற்கொள்ளவில்லை. முறையாக பூர்த்தி செய்யாத ஒப்புதல் படிவங்களை பயன்படுத்தியதோடு, சிகிச்சையின் ஆபத்துகள் குறித்து நோயாளிக்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை. நோயாளியின் உள்நோயாளி பதிவேடுகளை சமர்ப்பிக்க மருத்துவமனை தவறியதால், சிகிச்சையின் தரம் குறித்து ஆணையம் அதிருப்தி தெரிவித்தது.

நோயாளி ஜிப்மருக்கு மாற்றியபோது, வழங்கிய பரிந்துரை குறிப்பில் தேவையான மருத்துவ விவரங்கள் இல்லை. அதையடுத்து அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் தனியார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை ஆகியோரின் சேவைக் குறைபாட்டை உறுதி செய்த ஆணையம், இருவரும் சேர்ந்து பாதிக்கப்பட்ட நோயாளிக்கு இழப்பீடு வழங்க தீர்ப்பளித்துள்ளது.

அதில், சிகிச்சை செலவான ரூ.1,06,550 தொகையை 8 சதவீத வட்டியுடன் திருப்பி தர வேண்டும். உடல் மற்றும் மன வேதனைக்காக அறுவை சிகிச்சை நிபுணர் ரூ.4 லட்சம், மருத்துவமனை நிர்வாகம் ரூ.2 லட்சம் இழப்பீடு மற்றும் வழக்கு செலவிற்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது.

மருத்துவர்கள் சிகிச்சையில் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்க முடியாவிட்டாலும், நடைமுறை நெறிமுறைகளையும் உரிய கவனத்தையும் பின்பற்ற வேண்டும் என்பதை இந்த தீர்ப்பின் மூலம் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

Advertisement