பெட்ரோல் - டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 வரை உயர்த்த திட்டம்: வீட்டு காஸ் சிலிண்டர் ரூ.50 வரை அதிகரிக்கலாம்

6


புதுடில்லி: நாடு முழுதும் பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை கணிசமாக உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. மேற்காசிய போர் பதற்றத்தால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், அதை ஈடுகட்டும் வகையில் இந்த விலை உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது.


தமிழகம், மேற்குவங்கம், கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் என்ற பேச்சு வலுவாக எழுந்தது. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலும், 'ஐந்து மாநில தேர்தலை மனதில் வைத்தே, எரிபொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை' என விமர்சித்திருந்தார். ஆனால், தற்போதைக்கு விலை உயர்வு இருக்காது என மத்திய அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்தச் சூழலில், இன்று திடீரென வணிக காஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டது. இந்தச் சூழலில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 4 முதல் 5 ரூபாய் வரை உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல், சமையல் காஸ் சிலிண்டர் விலை 40 - 50 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என தெரியவந்துள்ளது.


இந்த விலை உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், நான்கு ஆண்டுகளுக்கு பின் எரிபொருட்களின் விலை முதல் முறையாக உயரும். மேற்காசியா போர் பதற்றத்தால், சர்வதேச எரிசக்தி சந்தையில் ஏற்பட்டிருக்கும் விளைவுகளை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. விலை உயர்வு தொடர்பாக இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. எனினும், ஒரு வாரத்திற்குள் விலை உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டால், போக்குவரத்துக்கான செலவுகள் அதிகரிக்கும். இதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்து சாமானிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

Advertisement