உ.பி.,யின் கல்கோடியாஸ் பல்கலைக்கு 'டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்' அங்கீகாரம்

புதுடில்லி: உத்தர பிரதேசத்தில் செயல்படும், 'கல்கோடியாஸ்' பல்கலை, உலகளவிலான, 'டைம்ஸ் ஹையர் எஜுகேஷன், 2026' தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

உ.பி.,யின் கிரேட்டர் நொய்டா பகுதியில் கல்கோடியாஸ் தனியார் பல்கலை செயல்பட்டு வருகிறது. இங்கு, உ.பி., மட்டுமின்றி நாடு முழுதும் இருந்து ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள லண்டனில் செயல்படும், 'டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்' அமைப்பின் நடப்பாண்டுக்கான உலக தரவரிசை பட்டியலில் கல்கோடியாஸ் பல்கலை இடம்பெற்றுள்ளது.

கற்பித்தல் தரம், ஆராய்ச்சி சூழல், ஆராய்ச்சியின் தரம், சர்வதேச கண்ணோட்டம் மற்றும் தொழில்துறை ஈடுபாடு அடிப்படையில் உலகம் முழுதும் உள்ள பல்கலைகளை இந்த அமைப்பு வரிசைப்படுத்துகிறது.

இந்தியாவில், 1,300க்கும் மேற்பட்ட பல்கலைகள் உள்ள நிலையில், இந்தாண்டுக்கான தரவரிசை பட்டியலில் 128 நிறுவனங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. அதன்படி, நம் நாட்டில் உள்ள தனியார் பல்கலைகளில் 27வது இடத்தை கல்கோடியாஸ் பல்கலை பிடித்துள்ளது. ஆராய்ச்சியின் அடிப்படையில், இந்த தரவரிசை பட்டியலில் இடம்பெற்றதன் வாயிலாக, அந்த துறையில் குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தை கல்கோடியாஸ் பெற்றுள்ளது.

இது குறித்து பல்கலை சி.இ.ஓ., டாக்டர் துருவ் கல்கோடியா கூறுகையில், 'இந்த தரவரிசையானது எங்களுக்கு ஒரு மைல்கல் மட்டுமல்ல; கனவு காணத் துணிந்த ஒவ்வொரு மாணவருக்கும், அதை நம்பியுள்ள ஒவ்வொரு பெற்றோருக்கும், ஒவ்வொரு இந்தியருக்குமான கொண்டாட்டமாகும்' என, தெரிவித்துள்ளார்.

'குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்' அமைப்பின் இந்தாண்டுக்கான தரவரிசை பட்டியலில், இந்தியாவில் உள்ள தனியார் பல்கலைகளில், கல்கோடியாஸ் பல்கலை 15வது இடத்தை பிடித்துள்ளது.



Advertisement