மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கு இன்றும் நாளையும் விடுப்பு இல்லை  * தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு

திருப்பூர்:நாளை, (3ம் தேதி), 'நீட்' தேர்வு நடக்கிறது. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி, இன்றும் (2ம் தேதியும்), நாளையும் (3ம் தேதியும்) செயல்படுமென அறிவித்துள்ள தேசிய மருத்துவ ஆணையம், கட்டாயம் மாணவர்கள் கல்லுாரிக்கு வர வேண்டும்; வருகைப்பதிவு செய்ய வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.



நாளை (3ம் தேதி) 'நீட்' தேர்வு நாடு முழுதும் நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஏழு தேர்வு மையங்களில், 3,608 பேர் தேர்வெழுதுகின்றனர். இம்முறை தனியார் பள்ளிகளை தவிர்த்து, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 'நீட்' தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேடு ஏற்படுவதை தடுக்க பல்வேறு கட்டுப்பாடு, கண்காணிப்புகளை தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி.) அறிவித்து வருகிறது.



அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி இன்றும் (2ம் தேதி), நாளையும் (3ம் தேதியும்) செயல்படும். மாணவர்கள் அவசர விடுப்பை தவிர்த்து, வருகைப்பதிவை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும். தேவையில்லாமல் மருத்துவ மாணவருக்கு விடுப்பு வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரியில் படித்து வரும், 298 மாணவரும் இன்றும், நாளையும் கல்லுாரி வர உள்ளனர்.



இது குறித்து, மருத்துவ கல்லுாரி மூத்த பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:



முந்தைய 'நீட்' தேர்வுகளின் போது, மருத்துவக்கல்லுாரி மாணவர்கள் சிலர், உண்மையான தேர்வர்களுக்கு பதிலாக முறைகேடாக தேர்வு எழுதியாக நாடு முழுதும் புகார் எழுந்தது. ஏற்கனவே மருத்துவ இடங்கள் பெற்றவர்கள், மீண்டும் 'நீட்' தேர்வு எழுதி கலந்தாய்வில் இடங்கள் பெறுவதாகவும், ஆவணங்கள் சரிபார்ப்பின் போது அது கண்டறியப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் முறைகேடு கண்டறியப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.



இத்தகைய முறைகேடுகளை தவிர்க்க, அனைத்து மருத்துவக் கல்லுாரிகளுக்கும், தேசிய மருத்துவ ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. வழிகாட்டுதல்களை பின்பற்றி, நாளை, நாளை மறுதினம் மருத்துவக் கல்லுாரி செயல்படும்; மாணவர்கள் விடுப்பு வழங்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement