திருடிய பணத்தில் 'சொகுசு' வாழ்க்கை

திருப்பூர்: தாராபுரத்தில் பூட்டிய வீட்டில் ஒரு நாள் விட்டு ஒருநாள் புகுந்து பொருட்களை திருடி, ஜாலியாக செலவிட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம், போக்குவரத்து ரவுண்டானா பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 34. மெட்ரிக் மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளி தாளாளர். இவர் தன் குடும்பத்தாருடன், 16ம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார்.

25ம் தேதி அவர்கள் வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, டிவி, மோட்டார், பாத்திரங்கள், பட்டு சேலைகள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டது தெரிந்தது.

இது குறித்து ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரித்தனர். தொடர் விசாரணையில், திருட்டில் ஈடுபட்ட தாராபுரத்தைச் சேர்ந்த ரவி, 43, சலீம், 33, முத்துக்குமார் 36, கோகுல் பிரகாஷ், 30, ஜீவானந்தம், 23, பிரகாஷ், 35 மற்றும் சிவலிங்கம், 59 ஆகியோரை கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது:

திருட்டு மற்றும் சிறு குற்ற சம்பவங்களில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, இவர்கள் ஏழு பேர் இடையே நட்பு ஏற்பட்டது.

சிறையிலிருந்து வெளியே வந்த பின், அனைவரும் ஒன்றாக ஊர் சுற்றியுள்ளனர். ராமச்சந்திரன் வெளியூர் சென்றதை அறிந்து கொண்டு, ஏழு பேரும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அந்த வீட்டில் நுழைந்து சிறிது சிறிதாக பொருட்களை திருடியுள்ளனர். அவற்றை வெளியே கடைகளில் விற்பனை செய்து அந்த பணத்தில் மது அருந்தி ஜாலியாக இருந்துள்ளனர்.

திருட்டில் ஈடுபட்ட ஏழு பேரை கைது செய்து, பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தாராபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஏழு பேரை, 15 நாள் சிறையில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்பேரில், ஏழு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement