பல்லடம் தொகுதியில் 35 சுற்று ஓட்டு எண்ணிக்கை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு, கடந்த23ம் தேதி நடந்தது. மாவட்ட சராசரியாக, 88.52 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.

அத்துடன், தேர்தல் அலுவலர், போலீசார், 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தபால் ஓட்டு பதிவு செய்துள்ளனர்.

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் உள்ள, 'ஸ்ட்ராங் ரூம்'களில் வைக்கப்பட்டுள்ளன. தீவிர போலீஸ் பாதுகாப்பும், சிசிடிவி கண்காணிப்பும் தொடர்கிறது.

ஓட்டு எண்ணிக்கை, 4ம் தேதி நடக்கிறது. கலை, 8:00 மணிக்கு தபால் ஓட்டு எண்ணிக்கையும், 8:30 மணிக்கு பதிவு ஓட்டு எண்ணிக்கையும் துவங்கும்.

ஒவ்வொரு தொகுதியிலும், தலா, 14 டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளன; தபால் ஓட்டு எண்ண, 500 ஓட்டுக்கு ஒரு 'டேபிள்'என்று அமைக்கப்பட்டுள்ளன. தேவையான அலுவலர்கள், 20 சதவீதம் கூடுதல் இருப்புடன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஓட்டு எண்ணிக்கைக்கு, 112 டேபிள்களும், தபால் ஓட்டுக்கு, 32 டேபிள்களும் அமைக்கப்பட உள்ளன.

மொத்தம், 568 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர், அதிபட்சமாக, பல்லடம் தொகுதி முடிவுகளை அறிய, 35 சுற்றுக்கள் வரை காத்திருக்க வேண்டும். திருப்பூர் தெற்கு மற்றும் மடத்துக்குளம் ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் விரைவாக வெளியாக வாய்ப்புள்ளது.

ஒவ்வொரு சுற்று முடிவிலும், ஓட்டுவிவரம் அறிவிக்கப்படும். காலை, 9:00 மணியில் இருந்து முன்னணி விவரங்கள் தெரியவரும் என, தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement