அவிநாசி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் 'தள்ளுமுள்ளு'

அவிநாசி:அவிநாசி கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால், சுவாமி தரிசனம் செய்ய முன்னேற்பாடு ஏதுமில்லாததால், பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், சித்திரை தேர்த்திருவிழா நடந்து வருகிறது. தேரோட்டம் நிறைவு பெற்ற நிலையில், நேற்று மே தின விடுமுறை என்பதால், பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

அரச மர பிள்ளையார் சன்னதியில் இருந்து வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில், 50 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனை செய்தனர்.

ஆனால், ஒரு கட்டத்தில் பொது தரிசனத்தில் பக்தர்கள் விரைவாக செல்வதாக கூறி சிறப்பு தரிசன வரிசையில் நின்ற பக்தர்கள் அதிருப்தி அடைந்து, ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்து ராஜகோபுரம் பகுதியில் கூட்டமாக திரண்டனர். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவிநாசி போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். அதற்குள் கோவில் ஊழியர்கள், பொது தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்களை ஒழுங்குபடுத்துவதாக கூறி வரிசையை மாற்றி அமைத்தனர். இதனால், சுட்டெரித்த வெயிலில், 3 மணி நேரத்துக்கு மேல் பக்தர்கள் கால்கடுக்க நிற்க வேண்டிய துயரத்திற்கு ஆளாகினர்.

பக்தர்கள் சிலர் கூறியதாவது:

அவிநாசி கோவிலுக்கு விசேஷம் அல்லது விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் வருகிறது. தேர்த்திருவிழா நடக்கிறது. அதிலும், மே 1ம் தேதி விடுமுறை என்பதால், பக்தர்கள் அதிகளவில் வருவர் என்பதை முன்கூட்டியே உணர்ந்து, வசதிகளை ஏற்படுத்த கோவில் நிர்வாகம் முனைப்பு காட்டியிருக்க வேண்டும்.

கோவிலுக்கு துளியும் சம்பந்தமில்லாத நபர்கள், கூட்டத்தை கட்டுப்படுத்துகின்றனர். அவர்களுக்கு அந்த அதிகாரத்தை தந்தது யார்? எனவே, பக்தர்கள் அதிகம் கூடும் நாட்களில், போதுமான வசதிகளை ஏற்படுத்த கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement