இ - பட்டாவில் திருத்தம் செய்ய சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம்

பெங்களூரு: ''பெங்களூரில், 23 லட்சம் சொத்துக்களுக்கு வழங்கப்பட்ட இ - பட்டாவில் திருத்தம் செய்ய, வரும், 16ம் தேதி முதல் சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடக்கும்,'' என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.

ஜி.பி.ஏ., அலுவலகத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:

பெங்களூரில், 23 லட்சம் சொத்துக்களுக்கு இ - பட்டா வழங்கப்பட்டு உள்ளது. அதிலுள்ள பிழைகளை திருத்தம் செய்ய, ஜி.பி.ஏ., அலுவலகங்களுக்கு மக்கள் செல்வதால் கூட்டம் அதிகரிக்கிறது. இதனை தடுக்க வரும், 16 ம் தேதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும், சிறப்பு இ - பட்டா முகாம் நடைபெறும்.

ஒவ்வொரு மாநகராட்சியிலும் குறைந்தது, ஐந்து முதல் 10 கவுன்டர்கள் திறக்கப்படும். பட்டா குறித்து ஏற்படும் சந்தேகம், திருத்தங்களை இங்கு மேற்கொள்ளலாம். விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். அடுத்த, 15 நாட்களில் பிரச்னை தீர்த்து வைக்கப்படும்.

கடந்த, 10 மாதங்களில், 23 லட்சம் சொத்துக்களுக்கு பட்டா வழங்கி இருப்பது சாதனையாகும். 37,480 குடியிருப்புகளுக்கு உரிமை சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. அரசின் இ - பட்டா திட்டத்தை, மத்திய அரசே பாராட்டி உள்ளது. பி பட்டாவை ஏ பட்டாவாக மாற்றி கொடுக்க, பல இடங்களில் அதிகாரிகள் லஞ்சம் கேட்பது, என் கவனத்திற்கு வந்து உள்ளது. இதுகுறித்து விசாரிக்கப்படும். வெளிப்படையான நிர்வாகத்தை வழங்க நாங்கள் முன்வந்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இங்கு பேசி முடித்த பின், நேராக சென்ட்ரல் சில்க் போர்டு சென்ற சிவகுமார், சில்க் போர்டு - ஆர்.வி.ரோடு இடையே கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தின் இரண்டாவது பாதையை திறந்து வைத்தார். இதன்மூலம் இந்த மேம்பாலம் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்து உள்ளது.

பின், பனசங்கரி சென்ற சிவகுமார், பனசங்கரி சந்திப்பு பகுதியில் நடை மேம்பாலம் கட்டும் பணியை துவக்கி வைத்தார்.

Advertisement