மினி பாக்கெட்டுகளில் காரம், இனிப்பு ஆவின் நிறுவனம் அறிமுகம்

சென்னை: அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் நடக்கும் கூட்டங்களை குறி வைத்து, சிறிய பாக்கெட்டுகளில் மிக்சர், மைசூர்பா, பால் பேடா மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளை, ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அரசுத் துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படும்போது, அதில் பங்கேற்போருக்கு டீ, காரம், இனிப்பு போன்றவை வழங்கப்படும். பெரும்பாலும், பிஸ்கட், சமோசா, இனிப்பு வகைகள் போன்றவை அதிகம் இடம் பெற்று வந்தன.

இந்த சந்தையை கைப்பற்ற, ஆவின் நிர்வாகம் தற்போது களம் இறங்கியுள்ளது. இதற்காகவே பிரத்யேகமாக, 20 ரூபாய் விலையில், 40 கிராம் மிக்சர்; 12 ரூபாய் விலையில், 20 கிராம் மைசூர்பா அல்லது பால் பேடா மற்றும் சிறிய பிஸ்கட் பாக்கெட் 10 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.

இது குறித்து, ஆவின் அதிகாரிகள் கூறியதாவது:

பெரிய அளவிலான இனிப்பு பெட்டிகளை வாங்கி பயன்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை தவிர்க்கவும், வீணாவதை தடுக்கவும் இந்த, 'மினி' பாக்கெட் காரம், இனிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

தற்போது சென்னையில் உள்ள ஆவின் பார்லர்களில் இந்த புதிய மினி பாக்கெட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைப்பதால், இல்லத்தரசிகள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே, இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement